ஓரியூரில் அரசு பழத்தோட்டம் அமைப்பதை கைவிடக்கோரி ஆடு, மாடுகளுடன் தாலுகா அலுவலகம் முன்பு கிராமமக்கள் போராட்டம்


ஓரியூரில் அரசு பழத்தோட்டம் அமைப்பதை கைவிடக்கோரி ஆடு, மாடுகளுடன் தாலுகா அலுவலகம் முன்பு கிராமமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2018 3:30 AM IST (Updated: 10 Feb 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

ஓரியூரில் அரசு பழத்தோட்டம் அமைப்பதை கைவிடக்கோரி ஆடு,மாடுகளுடன் தாலுகா அலுவலகம் முன்பு கிராமமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

தொண்டி,

திருவாடானை தாலுகா ஓரியூர் திட்டை கிராமத்தில் மேய்ச்சல் நிலம் , ஆதிதிராவிட மக்கள் சுடுகாடு, வழிபாட்டு தலம் போன்றவற்றை அரசு பழத்தோட்டம் அமைக்க அரசு கையகபடுத்தி இருப்பதை கைவிட்டு மீண்டும் அதனை கிராம மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கக்கோரி திருவாடானையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆடு,மாடு , சமையல் பாத்திரங்கள் ,விறகு மற்றும் உணவு பொருட்களுடன் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு திரண்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் முருகன் தலைமை தாங்கினார். சி.ஐ .டி.யூ. மாவட்ட பொருளாளர் சந்தானம் , ஓரியூர் திட்டை கிராம தலைவர் அருள் பத்திநாதன் ,கிராமிய மகளிர் மேம்பாட்டு அமைப்பு தலைவர் குழந்தை திரேஸ் ,செயலாளர் வேதம்மாள் ,ஒருங்கிணைப்பாளர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது கிராம மக்கள் ஓரியூர் திட்டை கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ள விளைநிலங்களுக்கு செல்லும் பாதையை அடைத்து அரசு பழத்தோட்டம் அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்.

ஓரியூர் திட்டை குடியிருப்பு பகுதியில் பழத்தோட்டத்திற்கு சுமார் 2 ஆயிரம் அடிக்கு மேல் மூன்று புதிய ஆழ்குழாய் அமைத்துள்ளதால் ஓரியூர் கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் தட்டுபாட்டை அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனே சரிசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டனர்.

அதனை தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜய்குமார், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தேர்தல் துணை தாசில்தார் சேதுராமன் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் பழத்தோட்டம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து கிராம மக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தாசில்தார் தலைமையில் வருகிற 14-ந் தேதி ஓரியூர் கிராம பிரதிநிதிகள் கூட்டம் நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதிஅளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 

Next Story