நவீன தகவல் தொழில்நுட்பம் அறிமுகம் கலெக்டர் ரோகிணி தகவல்


நவீன தகவல் தொழில்நுட்பம் அறிமுகம் கலெக்டர் ரோகிணி தகவல்
x
தினத்தந்தி 10 Feb 2018 4:00 AM IST (Updated: 10 Feb 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள நவீன தகவல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக சேலம் கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

சேலம்,

அரசுத்துறைகள் குறித்த பொதுமக்களின் பயன்பாட்டிற்கான நவீன தகவல் தொழில்நுட்பத்தினை சேலம் மாவட்டத்தில் காணொலி காட்சி மூலமாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர்பிரசாத் தொடங்கி வைத்தார். இதையொட்டி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி, மத்திய மந்திரி ரவிசங்கர்பிரசாத் புதிய தொழில்நுட்பம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது குறித்து கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

அரசின் திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் தங்கள் இடத்தில் இருந்தவாறு நவீன தகவல் தொழில்நுட்பம் மூலம் முழுமையாக பயன்பெறும் நோக்கத்தோடு, இந்தியாவிலேயே தமிழகத்தில் சேலம் மாவட்டத்திலும், ஆந்திர மாநிலம் ஈஸ்ட் கோதாவரியிலும், புதிய தொழில்நுட்பம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

https://salem.nic.in மற்றும் www .salem.nic.in என்ற இணையதளத்தை ஸ்மார்ட் போன், ஐ போன் உள்ளிட்டவற்றில் எளிதாக பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் “பிரைலி” முறையில் விவரங்களை அறிந்திடும் வகையிலும் உள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சேலம் மாவட்டத்தின் அனைத்து அரசுத்துறைகளின் செயல்பாடுகள், அலுவலக முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள் இடம்பெற்று உள்ளன.

ஆங்கிலத்தில் மட்டும் அல்லாமல் தேவைப்படுபவர்கள் தமிழ் உள்ளிட்ட பிற எந்த மொழி வேண்டுமானாலும், தேர்வு செய்து பயன்படுத்தலாம். சேலம் மாவட்டம் குறித்த அனைத்து பொது தகவல்கள் மற்றும் வருவாய்த்துறை, சுற்றுலாத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொதுமக்கள் தங்கள் இடங்களில் இருந்து கொண்டே தேவையான அரசுத்துறையின் பல்வேறு சேவைகளையும் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

தேவையற்ற காலவிரயம் தவிர்ப்பதற்கும், அடுத்த தலைமுறைக்கு தேவையான முன்னேற்ற நடவடிக்கையாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்ட நிர்வாகத்தின் 4 மாத முயற்சியின் மூலம் அரசின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் தேசிய தகவலியல் அலுவலர் ரமேஷ், கூடுதல் தகவலியல் அலுவலர் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story