மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார வாகனம்


மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார வாகனம்
x
தினத்தந்தி 10 Feb 2018 4:15 AM IST (Updated: 10 Feb 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார வாகனத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் தொடங்கி வைத்தார்.

சேலம்,

தமிழ்நாடு காவல்துறை மற்றும் சேலம் மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில் மது மற்றும் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சேலம் மாநகர எல்லைக்குள் வலம் வரக்கூடிய இந்த வாகனத்தை சேலம் பழைய பஸ் நிலையம் அருகே மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை, உதவி கமிஷனர்கள் பாலசுப்பிரமணியன், பிரேம் ஆனந்த் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு வாகனம் சேலம் மாநகர எல்லைக்குள் தொடர்ந்து 7 நாட்கள் வலம் வரும். வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கி மூலம் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அறிவிப்பு செய்யப்படும்.

மேலும் வாகனத்தில் பிளக்ஸ் பேனர் மூலம் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எழுதப்பட்டுள்ளது. காலியான சாராய பாட்டில் சொல்லுது.. இன்று உன்னால் நான் காலி. நாளை என்னால் நீ காலி!, மனைவி, குழந்தைகள் என் உயிர். அதனால், உன் உயிரை குடிக்கும் மதுவை தவிர்ப்பீர். மதுவில் இருப்பது விஷம். அதனால், மரணம் நிச்சயம். மது மற்றும் சாராயத்தை குடிப்பது குடும்பத்தை பாதிக்கும் என்பன போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் நாளை(ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு, சேலம் காந்தி மைதானத்தில் சேலம் மாநகர காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் இந்த போட்டியில் பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். ஆண்களுக்கு 6 கிலோ மீட்டர் தூரம் ஓட்டமும், பெண்களுக்கு 4 கிலோ மீட்டர் தூர ஓட்டமும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்பவர்கள் அதிகாலை 5.30 மணிக்கே தயாராக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிற்து.

முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 என பரிசு வழங்கப்படுகிறது.

Next Story