மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி


மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 10 Feb 2018 4:15 AM IST (Updated: 10 Feb 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நாகர்கோவிலில் நடந்தது. பேரணியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கியது. பேரணியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவரும், அதிகாரிகளும் அந்த பேரணியில் கலந்து கொண்டு, நடந்து சென்றனர். பேரணி குறித்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நிருபர்களிடம் கூறியதாவது:-

மது மற்றும் கள்ள சாராயம் அருந்துவதால் நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு விளைவிக்கும். உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இருதயம் பலவீனமாக்கப்படும். கண் பார்வை, கை,கால் வலிப்பு, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு சோர்வடைய செய்யும். கல்லீரல் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும். இதனால் திடீர் மரணமும் ஏற்படும். ஒரு மனிதனை நோயாளியாக ஆக்குவது மட்டுமல்லாமல் தற்கொலைக்கும் இது தூண்டுகிறது. மது அருந்தும் பழக்கத்தால் உற்றார், உறவினர்களிடம் கெட்ட பெயர் ஏற்படும். அவர்களுடைய வெறுப்புக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

குடும்பத்தில் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் அவப்பெயர் ஏற்படுவது மட்டுமல்லாது, குடும்பத்தின் முன்னேற்றத்தையும் பாதிக்கும். இதுபோன்ற பல தீமைகளிலிருந்து மது அருந்துபவர்கள் விடுபட்டு, நாமும் மது அருந்தாமல், மற்றவர்களை போன்று வாழ்வில் அனைத்து நிலைகளிலும் உயர்ந்து, முன்னேறிட வேண்டும். இதன் மூலம் வீட்டிற்கும், நாட்டிற்கும் வளம் சேர்ப்போம். இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

பேரணியில் மாணவ, மாணவிகள், போலீசார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணி எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ராகுல்நாத், மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, உதவி ஆணையர்கள் (கலால்) காளிமுத்து, அபுல்காசிம், கோட்ட அதிகாரி (ஆயம்) கோலப்பன், மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் பிரிஜிட்மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் மது குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. தினை மற்றும் தீட்சா கலைக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஒயிலாட்டம், பறையாட்டம், நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் மதுபானத்தால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story