கடைசி நாள் கூட்டத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டாத எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக சட்டசபையில் உறுப்பினர்கள் இருக்கைகள் காலி


கடைசி நாள் கூட்டத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டாத எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக சட்டசபையில் உறுப்பினர்கள் இருக்கைகள் காலி
x
தினத்தந்தி 10 Feb 2018 3:45 AM IST (Updated: 10 Feb 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

கடைசி நாள் கூட்டத்தில் பங்கேற்க எம்.எல்.ஏ.க்கள் ஆர்வம் காட்டாததால் கர்நாடக சட்டசபையில் உறுப்பினர்களின் இருக்கைகள் காலியாக இருந்தன.

பெங்களூரு,

கடைசி நாள் கூட்டத்தில் பங்கேற்க எம்.எல்.ஏ.க்கள் ஆர்வம் காட்டாததால் கர்நாடக சட்டசபையில் உறுப்பினர்களின் இருக்கைகள் காலியாக இருந்தன. மந்திரிகள் வராததால் ஜெகதீஷ் ஷெட்டர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

நிறைவு நாள் கூட்டம்

கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தொடர் கடந்த 5-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. இது நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார். அதைத்தொடர்ந்து நேற்று இந்த கூட்டத்தொடரின் நிறைவு நாள் கூட்டம் நடைபெற்றது.

சட்டசபை காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் முந்தைய நாளே அறிவித்துவிட்டார். ஆனால் நேற்று காலை 10 மணிக்கு கூட வேண்டிய சட்டசபை காலை 11.20 மணிக்கு தான் கூடியது. அப்போதும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அப்போது பா.ஜனதா உறுப்பினர் ஜீவராஜ் எழுந்து, “கல்வித்துறை மந்திரி தன்வீர்சேட் சபைக்கு வரவில்லை. மதிய உணவு திட்ட ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்களை அவர் சந்திக்கவில்லை. அவர் எங்கே சென்றார்?“ என்று கேள்வி எழுப்பினார்.

கடும் அதிருப்தி

அதைத்தொடர்ந்து மந்திரிகள் வராததால் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், “8 மந்திரிகள் அனுமதி பெற்று சபைக்கு வரவில்லை. மந்திரிகள் வராவிட்டால் இந்த சபையை எப்படி நடத்துவது?. சொந்த பணிக்கு செல்ல மந்திரிகளுக்கு சபாநாயகர் அனுமதி வழங்கக்கூடாது. அவசர வேலைகளுக்கு மட்டும் வெளியே செல்ல மந்திரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். முதல் வரிசையில் மந்திரிகளின் இருக்கைகள் காலியாக உள்ளன. உறுப்பினர்கள் வராததால் 1½ மணி நேரம் தாமதமாக சட்டசபை கூடியது. கட்சி பாகுபாடு இன்றி நான் இந்த கருத்தை சொல்கிறேன். உறுப்பினர்கள் அனைவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும்” என்றார்.

அப்போது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ரமேஷ்குமார் பேசுகையில், “சட்டசபையை நடத்த போதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாதால் காலை 9.50 மணியில் இருந்து 11.20 மணி வரை கோரம்(கூட்டத்தை நடத்துவதற்கான குறைந்தபட்ச எண்ணிக்கை) மணி அடித்துக் கொண்டே இருந்தது. மகதாயி பிரச்சினை, மதிய உணவு திட்ட ஊழியர்களின் போராட்டம் குறித்து இங்கு விவாதிக்க வேண்டியுள்ளது. இன்னும் ஒரு மாதம் முடிந்தால், நான் இந்த சபைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும். இந்த சபையின் புனிதத்தை புரிந்துகொள்ள வேண்டும். சபையின் முக்கியத்துவம் போன பிறகு யோசித்து என்ன பலன்?“ என்றார்.

சபை வெறிச்சோடியது

சபை கூட்டம் தொடங்கி ஒரு மணி நேரத்திற்குள் ஒவ்வொரு உறுப்பினராக வெளியே சென்றனர். இதனால் சபையில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. இதன் காரணமாக சபை வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story