மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்


மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2018 3:45 AM IST (Updated: 10 Feb 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் கோஷமிட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.

மூங்கில்துறைப்பட்டு,

விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொருவளூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள காட்டுக்கொட்டாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த போலீசார், கடையை நிரந்தரமாக மூடுவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை தற்காலிகமாக கடை செயல்படாது என்றும் கூறினர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் டாஸ்மாக் அதிகாரிகள் கடையை திறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவது பற்றி அறிந்த மதுபிரியர்கள், டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள், இங்கு மதுகுடிக்க வருபவர்கள் போதை தலைக்கேறியதும், கல்லூரி மாணவிகள், பெண்களை கேலி கிண்டல் செய்வதால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று தெரிவித்தனர்.

அப்போது மதுபிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடினால், வெகு தொலைவில் உள்ள ஊர்களுக்கு சென்று மதுபாட்டில்கள் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்று கோஷம் எழுப்பினர்.

அதற்கு போலீசார், பெண்களும், மதுபிரியர்களும் தங்களது கோரிக்கை தொடர்பாக மனு எழுதி கலெக்டர் அலுவலகத்தில் கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்று கூறினர். இதையடுத்து டாஸ்மாக் கடையை அதிகாரிகள் மூடிவிட்டு அங்கிருந்து சென்றனர். பின்னர் பெண்களும், மதுபிரியர்களும் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பெண்கள் மற்றும் மதுபிரியர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story