சென்னையில், பிசியோதெரபி டாக்டர், மீண்டும் கைது


சென்னையில், பிசியோதெரபி டாக்டர், மீண்டும் கைது
x
தினத்தந்தி 10 Feb 2018 4:15 AM IST (Updated: 10 Feb 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ரூ.2 கோடி சுருட்டிய பிசியோதெரபி டாக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டார். சென்னையில் மேலும் ஒரு மாணவரை அவர் ஏமாற்றினார்.

சென்னை,

தர்மபுரி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). பிசியோதெரபி டாக்டரான இவர் அதுதொடர்பான தொழிலைச் செய்யாமல் குறுக்குவழியில் மோசடி தொழிலைச் செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளதாக இவர் மீது புகார் எழுந்துள்ளது.

மருத்துவ கல்லூரிகளில் இடம் வாங்கித்தருவதாக மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தி, இவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். சென்னையில் அனிதா என்பவரின் மகனுக்கு மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் இடம் வாங்கித்தருவதாக ரூ.35 லட்சம் வாங்கி மோசடி செய்த புகாரில் கடந்த வாரம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னையில் இன்னொரு மாணவனுக்கும் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி ரூ.20 லட்சத்தை சுருட்டியிருக்கிறார்.

இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மல்லிகா, உதவி கமிஷனர் சச்சிதானந்தம் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுமதி 2-வது வழக்கு ஒன்றை பதிவு செய்து ராஜேசை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

பிசியோதெரபி டாக்டர் ராஜேஷ் இதுபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அப்பாவி மாணவ- மாணவிகளை ஏமாற்றி, ரூ.2 கோடி வரை பணத்தைச்சுருட்டி மோசடி மன்னனாக வலம் வந்துள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவில் இவர் மீது 3-வது ஒரு வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. தர்மபுரியில் இவர் மீது 4 வழக்குகளும், சேலம், கோவை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இவர் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

சேலத்தில் சொகுசு கார்களை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக இவர்மீது ஒரு புகார் உள்ளது. இவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். மோசடி செய்த பணத்தில் தர்மபுரியில் இவர் சொகுசு வீடு ஒன்று கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இவரது மோசடி லீலைகளுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் பக்கபலமாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.

மோசடி பணத்தில் இவர் வாங்கி குவித்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து, இவரிடம் ஏமாந்த அப்பாவி மாணவ-மாணவிகளுக்கு பணத்தை வசூலித்துக் கொடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story