அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 10 Feb 2018 4:02 AM IST (Updated: 10 Feb 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அதிகாரிகள் அகற்றினார்கள்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் அருகே புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையும், தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையும் உள்ளது. இதில் திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த அந்த கடைகளை, சம்பந்தப்பட்டவர்களே அகற்றிக்கொள்ள வேண்டும் என்று வருவாய்த்துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அறிவித்திருந்தனர். ஆனால் கடை வைத்திருந்தவர்கள், தங்களது கடைகளை அகற்றவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை புதுக்கோட்டை தாசில்தார் தமிழ்மணி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையோரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினார்கள். அப்போது அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கணேஷ்நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Next Story