ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் படுகாயம்


ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் படுகாயம்
x
தினத்தந்தி 10 Feb 2018 5:03 AM IST (Updated: 10 Feb 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் பறிப்பின் போது தாக்கப்பட்டு ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் படுகாயம் அடைந்தார். அவரை தாக்கி செல்போனை பறித்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த இளம்பெண் திரவிதா சிங் (வயது24). இவர் மும்பை போர்ட் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தினசரி மின்சார ரெயிலில் வருவது வழக்கம்.

அதன்படி நேற்றுமுன்தினம் காலை அவர் மின்சார ரெயிலில் வந்து கொண்டிருந்தார். ரெயில் சான்ட்ஹர்ஸ்ட் ரோடு ரெயில் நிலையத்தை தாண்டி மஸ்ஜித் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது, அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அவர் ரெயிலின் வாசற்படி அருகே நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது தண்டவாளத்தின் அருகே தடியுடன் நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் திரவிதா சிங்கின் கையில் ஓங்கி அடித்தான்.

இதில் அவர் நிலைகுலைந்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். உடனே அந்த சிறுவன் திரவிதா சிங்கின் செல்போனை எடுத்து கொண்டு ஓடி விட்டான். இதை பார்த்து அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரெயில் மஸ்ஜித் ரெயில் நிலையத்தில் நின்றதும் அவர்கள் இறங்கி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திரவிதா சிங்கை தாக்கி செல்போனை பறித்த சிறுவனை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சி மூலம் போலீசார் அடையாளம் கண்டனர். நேற்று மஸ்ஜித் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

சிறுவன் மீது கொலை முயற்சி, கொள்ளையடித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story