மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ரூ.25 லட்சம் மோசடி


மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ரூ.25 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 10 Feb 2018 5:30 AM IST (Updated: 10 Feb 2018 5:30 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக குடியாத்தம் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

குடியாத்தம்,

குடியாத்தத்தை அடுத்த ஆர்.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மனைவி ஜோதி (வயது 42), மகளிர் சுயஉதவிக்குழு தலைவியாக உள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராஜாமணி, நிர்மலா ஆகிய 3 பெண்கள் ஜோதியை சந்தித்துள்ளனர்.

அப்போது மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு வங்கி மூலம் ரூ.1 லட்சம் வை- ர கடனுதவி பெற்று தருவதாகவும், அதற்கு ஒருவருக்கு ரூ.2 ஆயிரத்து 500 கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனை உண்மை என நம்பிய ஜோதி, சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மகளிர் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களிடம் அது குறித்து தெரிவித்து சுமார் ரூ.25 லட்சம் வசூல் செய்து சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கடன் வாங்கி தரும்படி ராஜேஸ்வரி உள்ளிட்ட 3 பெண்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை வாங்கிய அவர்கள் வங்கியில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு கடன் வாங்கி கொடுக்கவில்லை.

பல முறை கேட்டும் கடன் பெற்று தராததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை ஜோதி உணர்ந்தார். இதனையடுத்து 3 பெண்கள் மீது அவர் பரதராமி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இது குறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபுவுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவரது உத்தரவின்பேரில்கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் தீபா, பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வடிவேலன், ராமமூர்த்தி ஆகியோர் அது குறித்து விசாரித்து மோசடி செய்த ராஜேஸ்வரி, ராஜாமணி, நிர்மலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு குறித்து விசாரித்து போலீசார் மேல் நடவடிக்கை எடுக்க உள்ளனர். 

Next Story