சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டி 20 பேர் காயம்


சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டி 20 பேர் காயம்
x
தினத்தந்தி 10 Feb 2018 5:34 AM IST (Updated: 10 Feb 2018 5:34 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே நடந்த எருது விடும் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. அப்போது காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்,

தமிழகத்தில் தை, மாசி மாதங்களில் ஜல்லிக்கட்டு, எருதுவிடும் விழாக்கள் பல்வேறு கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்திலும் ஆண்டுதோறும் கிராமங்களில் எருதுவிடும் விழா நடந்து வருகிறது. அதன்படி திருப்பத்தூர் அருகே உள்ள ரெட்டிவலசை கிராமத்தில் நேற்று எருதுவிடும் விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இதனையொட்டி காளைகள் ஓடும் பாதையின் இருபுறமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு அந்த பாதை சீர்படுத்தப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, பர்கூர் உள்பட பல்வேறு பகுதியிலிருந்து காளைகளை லாரிகள், வேன்களில் ஏற்றி அவற்றின் உரிமையாளர்கள் கொண்டு வந்த வண்ணம் இருந்தனர். இவ்வாறு 223 காளைகள் கொண்டு வரப்பட்டன.

சீறிப்பாய்ந்து வரும் காளைகளை துணிச்சலுடன் தொட்டு வீரத்தை காட்டுவதற்காகவும் இளைஞர்கள் திரண்டிருந்தனர். அதேபோல் அதனை வேடிக்கை பார்ப்பதற்காக இருபுறமும் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

காளைகளுக்கு ஊக்க மருந்துகொடுக்கப்பட்டதா? எருதுவிடும் விழாவில் பங்கேற்க தகுதியான காளைகளா? என்பதை கால்நடை மருத்துவர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். இதில் 3 காளைகள் தகுதி இழப்பு செய்யப்பட்டது. பின்னர் காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக திறந்துவிடப்பட்டு ஓடவிடப்பட்டன. ஒவ்வொரு காளையும் ஓடி வரும்போது இளைஞர்கள் ஆரவாரம் செய்தனர்.

பலர் அந்த காளைகளை தொடுவதற்காக பின்னால் ஓடி வந்தனர். அப்போது சில காளைகள் வந்த பாதையிலேயே திடீரென திரும்பி அவர்களை முட்டுவதற்கு பாய்ந்தது. அவற்றிடமிருந்து தப்பிக்க இளைஞர்கள் கீழே படுத்துக்கொண்டனர். எனினும் காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.

அவர்களை அங்கிருந்த விழாக்குழுவினர் தயாராக நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்சுக்கு தூக்கிச்சென்று சிகிச்சை அளித்தனர். விழா தொடங்கியதிலிருந்து முடியும் வரை விறுவிறுப்பாக இருந்தது. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு கிருஷ்ணசாமி செட்டியார், சஞ்சீவி, சீனிவாசன், ராமலிங்கம், நாகராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

விழாவில் நல்லதம்பி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத், கிராம நிர்வாக அலுவலர் மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனையொட்டி குரிசிலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

Next Story