ராமாயணத்தில் அறம் வென்றது; மறம் புகழால் நின்றது, கம்பன் விழாவில் வைகோ பேச்சு


ராமாயணத்தில் அறம் வென்றது; மறம் புகழால் நின்றது, கம்பன் விழாவில் வைகோ பேச்சு
x
தினத்தந்தி 11 Feb 2018 4:30 AM IST (Updated: 11 Feb 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

ராமாயணத்தில் அறம் வென்றது; மறம் புகழால் நின்றது என்று கோவையில் நடந்த கம்பன் விழாவில் வைகோ பேசினார்.

கோவை,

கோவையில் உள்ள கம்பன் கழகம் சார்பில் 46-ம் ஆண்டு கம்பன் விழா கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மணி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கம்பன் கழக பொருளாளர் ஆர்.ஆர்.பாலசுந்தரம் வரவேற்றார். பின்னர் விழா மலர் வெளியிடப்பட்டது.

விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்து கொண்டு பேசினார். ராமாயணத் தில் வென்றது அறமா? மறமா?என்ற தலைப்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கம்பர் எழுதிய ராமாயணம் 118 படலங்களை கொண்டது. அதில் 10 ஆயிரத்து 368 பாடல்கள், மிகைப்பாடலாக 1,293 பாடல்கள் என்று மொத்தம் 11 ஆயிரத்து 661 பாடல்கள் உள்ளன. இதில் அறம் என்ற சொல் 61 பாடல்களும், அறத்தினால் அறம் என்ற சொல் 59 பாடல்களிலும், மறம் (வீரம்) என்ற சொல் 16 பாடல்களிலும், மறத்தால் மறம் என்ற சொல் 18 பாடல்களிலும் வருகிறது.

ராமனுக்கும், ராவணனுக்கும் நடந்த இறுதி போரில் கடுமையான யுத்தம் நடக்கிறது. அதில் மறம் வெல்லவில்லை. அறம்தான் வெல்லுகிறது. போரில் ராவணன் இறந்தான்.

இதற்கிடையே 16 வருடங்கள் முடிந்ததால், கூறியபடி ராமன் வரவில்லை என்று பரதன் தீயில் பாய்வதற்காக தீ மூட்டுகிறான். அப்போது அங்கு அனுமான் சென்று தீயை அணைத்து ராமனின் தூதுவன் நான், ராமன் வந்து விட்டார் என்று கூறினார்.

அதன்பின்னர் விடைபெறும் படலம், முடிசூடும் படலம் வருகிறது. மொத்தத்தில் கம்பர் எழுதிய ராமாயணத்தில் அறம்தான் வென்றது. மறம் புகழால் நின்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக விழாவில் பங்கேற்க வந்த வைகோ நிருபர்களிடம் கூறும்போது, ‘நான் அரசியலில் இருந்தாலும், மாதம் ஒருமுறை இதுபோன்ற இலக்கிய கூட்டங்களில் பங்கேற்று வருகிறேன். அதற்காக என்னை தயார்படுத்திக்கொள்ள அதிக புத்தகங்களை படித்து வருகிறேன்‘ என்றார்.

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ம.தி.மு.க. சார்பில் நிதி வழங்கப்படுமா? என்று வைகோவிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘இலக்கிய கூட்டங்களுக்கு செல்லும்போது நான் அரசியல் பேசமாட்டேன்‘ என்றார்.

விழாவில் கம்பன் கழகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story