பள்ளிக்கூடங்களில் நீதிபோதனை வகுப்பு நடத்தப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


பள்ளிக்கூடங்களில் நீதிபோதனை வகுப்பு நடத்தப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
x
தினத்தந்தி 11 Feb 2018 3:30 AM IST (Updated: 11 Feb 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூடங்களில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறி உள்ளார்.

நம்பியூர்,

நம்பியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் பஸ் நிலையம், மேல்நிலை குடிநீர் தொட்டி, தார் ரோடு உள்பட ரூ.3 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகளுக்கான பூமி பூஜை போடும் பணி நம்பியூரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் கோபி ஆர்.டி.ஓ. எஸ்.கோவிந்தராஜன், முன்னாள் எம்.பி. கே.கே.காளியப்பன், பேரூராட்சி செயல் அதிகாரி கணேசன், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணியம், சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், வக்கீல் கங்காதரன், பேரூர் அ.தி.மு.க. செயலாளர்கள் கருப்பணன், முருகேசன், சேரன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோபி சட்டசபை தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் 2 ஆயிரத்து 500 பேருக்கு வீடுகள் கட்டித்தரவும் அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்களில் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அரசின் சார்பில் கற்பித்தலும், கற்றலும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த புத்தகம் 16 ஆயிரம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

மேலும் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்த பள்ளிக்கூடங்களில் முன்பு இருந்தது போன்று நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் மாணவ- மாணவிகளுக்கு நல்லொழுக்கத்தையும், முதியோர்களை பேணி காக்கவும், தேர்வு பற்றிய அச்சத்தை போக்கவும் 16 ஆயிரம் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்பட உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கல்வித்துறைக்காக ரூ.31 ஆயிரம் கோடி ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடு தான். மாணவ- மாணவிகளின் நலன்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story