திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்களை பந்தாடிய காளைகள்


திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்களை பந்தாடிய காளைகள்
x
தினத்தந்தி 11 Feb 2018 3:00 AM IST (Updated: 11 Feb 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள், மாடுபிடி வீரர்களை பந்தாடின. காளைகள் முட்டியதில் 26 பேர் காயம் அடைந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நல்லமநாயக்கன்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. முன்னதாக கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சாமுவேல் ஜெபராஜ் வேதமுத்து தலைமையிலான மருத்துவக்குழுவினர் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, ஈரோடு, சிவகங்கை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400 காளைகள் கொண்டுவரப்பட்டன. இந்த காளைகளை அடக்க 372 மாடுபிடி வீரர்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்திருந்தனர். தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் 357 வீரர்கள் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர்.

காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதனை ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ஜான்சன் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் கற்பகம் முன்னிலை வகித்தார்.

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் சுழற்சி முறையில் மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர்.

காளைகள் வீரர்களிடம் சிக்காமல், வாடிவாசலில் இருந்து வெளியே வந்ததும் துள்ளி குதித்து ஓடின. சில காளைகள் களத்தில் நின்று மாடுபிடி வீரர்களை மிரட்டின. சில காளைகளின் பெயரை அறிவித்த உடன் மாடுபிடி வீரர்கள் அந்த காளைகளை பிடிக்காமல் ‘கேலரி’யில் தொங்கிக்கொண்டு இருந்தனர். அந்த காளைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. தன்னை அடக்க வந்த வீரர்களை சில காளைகள் பந்தாடின.

காளைகளை அடக்கிய காளையர்களுக்கு சில்வர் பாத்திரங்கள், குத்துவிளக்கு, சைக்கிள், வேட்டி, துண்டு, பட்டுசேலை, கட்டில், பீரோ, வெள்ளிக்காசு, பேக், பணம் உள்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 355 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த லூர்துராஜ் (வயது 25), மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த ராஜா (23), சோழவந்தானை சேர்ந்த பார்த்தி (28), கொசவப்பட்டியை சேர்ந்த அசோக் குமார் (23) தேத்தாம்பட்டியை சேர்ந்த லோகேஷ் உள்பட 26 பேர் காயம் அடைந்தனர். இதில் 5 பேர் பார்வையாளர் கள் ஆவர்.

காயம் அடைந்தவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். படுகாயம் அடைந்த 4 பேர், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வண்ணம் தடுக்க தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர். ஜல்லிக்கட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். 

Next Story