தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தபிறகே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்


தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தபிறகே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 11 Feb 2018 4:30 AM IST (Updated: 11 Feb 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்றத்தில் அ.தி.மு.க.அரசு பெரும்பான்மையை நிரூபித்த பிறகே பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என வேலூர் வந்த பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் அம்பாலால் கிரீன் பீல்டில் ரோட்டரி மாவட்டம் 3231-ன் முதல் மாவட்ட மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. இதன் 2-வது நாளான நேற்று சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு வருகிற 19-ந் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அரசுக்கு 18 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாத நிலையில் பெரும்பான்மை இல்லாத இந்த அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தால் சட்டபடி செல்லாது. இந்த அரசு கையாளாகாத அரசாக உள்ளது. எனவே உடனடியாக பதவி விலகினால் தமிழக மக்களுக்கு நன்மை நடக்கும். உடனடியாக தமிழகத்துக்கு தேர்தல் வர வேண்டும்.

இந்த அரசு தொலைநோக்கு பார்வையில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. கிடைத்தவரை லாபம் என்று கொள்ளையில் தான் ஈடுபட்டு வருகின்றது. பா.ம.க. கடந்த 10 ஆண்டுகளாக வேளாண்மை துறைக்கு வரைவு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

தெலுங்கானா அரசு இதனை ஏற்று அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த உள்ளது. தமிழக அரசும் இதன்படி நடக்க கோரிக்கையாக வைத்து வருகிறோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி இல்லை. 1½ கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பற்று உள்ளனர். தமிழகத்தில் பாலிடெக்னிக் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்து வருகிறது. ஒரு துணைவேந்தர் பணிக்கு ரூ.10 கோடி முதல் ரூ.30 கோடி வரை லஞ்சம் வாங்குகின்றனர். அதனை வசூல் செய்யவே பேராசிரியர்கள் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்ப துணைவேந்தர்கள் லஞ்சம் வாங்குகின்றனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதில் துணை வேந்தருக்கு ரூ.10 கோடி வரை லஞ்சம் வாங்கி கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

போக்குவரத்து கழகத்தில் 30 ஆயிரம் பேரை முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் முறைகேடாக பணியமர்த்தியுள்ளதால் தான் தற்போது போக்குவரத்து துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தற்போதைய அமைச்சர் கூறிவருகிறார். இது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும்.

நாளை (இன்று) கோவையில் பா.ம.க. சார்பில் வேளாண் வரைவு அறிக்கை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், மாநில மகளிர் அணி தலைவி வரலட்சுமி, மாவட்ட செயலாளர்கள் அன்பழகன், வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் உள்பட கட்சி நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story