வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை சாவில் மர்மம் உள்ளதாக போலீசில் தாய் புகார்


வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை சாவில் மர்மம் உள்ளதாக போலீசில் தாய் புகார்
x
தினத்தந்தி 11 Feb 2018 3:45 AM IST (Updated: 11 Feb 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் உள்ளதாக போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.

சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி தேர் வடக்கு வீதியை சேர்ந்தவர் லெட்சுமிநாராயணன் மகன் ராஜகோபால். இவர், அரசு உதவிபெறும் பள்ளியில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருக்கடையூர் அருகே கன்னங்குடி கிராமத்தை சேர்ந்த முகுந்தன் மகள் புஷ்பா (வயது 32) என்பவருக்கும் கடந்த 21.8.2015 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது வரதட்சணையாக பெண்ணுக்கு 30 பவுன் நகை, ஒரு மோட்டார் சைக்கிள் கொடுத்துள்ளனர். இந்தநிலையில், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் 10 பவுன் நகை, ரூ.5 லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு புஷ்பாவிடம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து புஷ்பா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்று நடந்த விவரங்களை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து புஷ்பாவின் பெற்றோர் சீர்காழிக்கு புஷ்பாவை அழைத்து வந்து ராஜகோபாலிடம் விரைவில் 10 பவுன் தருவதாக கூறி மகளை விட்டு சென்றனர்.

இளம் பெண் தற்கொலை

இந்தநிலையில் நேற்று புஷ்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புஷ்பாவின் தாய் தேன்மொழி (57), சீர்காழி போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் எனது மகள் புஷ்பாவின் சாவில் மர்மம் உள்ளது. வரதட்சணை கேட்டு எனது மகளை கொடுமைபடுத்திய அவளுடைய கணவர் ராஜகோபால், மாமனார் லெட்சுமி நாராயணன், மாமியார் ராணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இறந்துபோன புஷ்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். புஷ்பாவிற்கு ஒரு வயதில் தரணிபிரியன் என்ற மகன் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story