திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் ரூ.78 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் ரூ.78 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Feb 2018 4:30 AM IST (Updated: 11 Feb 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமானநிலையத்தில் பயணிகள் கடத்தி வந்த ரூ.78 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி,

திருச்சி விமானநிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது ரபுயூதீன் என்பவருடைய உடைமைகளை சோதனை செய்தபோது, அவர் மின்சாதன பொருளில் (அடாப்டர்) மறைத்து வைத்து, 600 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.18 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த பைசல்கான் மற்றும் பகுருதீன் ஆகியோரிடம் 952 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.29 லட்சம் என்றும், முகமது ஆசிக் என்ற பயணியிடம் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகளை, அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கையை சேர்ந்த பிரசாந்த் ஆரோக்கியம் என்பவர் பைப்பில் மறைத்து கடத்தி வந்த 131 தங்க கம்பிகளை பறிமுதல் செய்தனர்.

அவை மொத்தம் 363 கிராம் இருந்தது எனவும், அதன் மதிப்பு ரூ.11 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி நேற்று முன்தினம் இரவு மட்டும் மொத்தம் ரூ.78 லட்சம் மதிப்பிலான தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story