பெண் அதிகாரியிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது


பெண் அதிகாரியிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 11 Feb 2018 5:20 AM IST (Updated: 11 Feb 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

பெண் அதிகாரியிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடனுக்கு வாங்கிய இருசக்கர வாகனத்துக்கு தவணை தொகை செலுத்துவதற்காக அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

புதுச்சேரி,

புதுவை நைனியப்ப பிள்ளை வீதியை சேர்ந்தவர் அம்புரோஸ். இவரது மனைவி கிறிஸ்டியன் வசந்தி (வயது 52) கலை பண்பாட்டுத்துறை துணை கண்காணிப்பாளர். இவர் சம்பவத்தன்று மதியம் தனது குடும்ப நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வில்லியனூர் சென்றார். வேல்ராம்பட்டு ஏரிக்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களை மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் வழிமறித்து கிறிஸ்டியன் வசந்தியின் கைப்பையை பறித்துச் சென்றனர். அதில் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம், ஏ.டி.எம். கார்டு, செல்போன், பென் டிரைவ் போன்றவை இருந்தன.

இது குறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறி ஆசாமிகள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசாரித்ததில் அவர்கள் வில்லியனூரை சேர்ந்த சூர்யா(18), ஆரியபாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ்(19) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்ததில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கடன் திட்டத்தில் புதிதாக இருசக்கர வாகனத்தை வாங்கி இருப்பதும், அதற்கான தவணை தொகையை செலுத்துவதற்காக வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story