கண்களை காத்திடுவோம்


கண்களை காத்திடுவோம்
x
தினத்தந்தி 11 Feb 2018 12:15 PM IST (Updated: 11 Feb 2018 12:15 PM IST)
t-max-icont-min-icon

தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், செல்போன்களை நீண்ட நேரம் கூர்ந்து கவனிக்கும்போது கண்களுக்கு அழுத்தம் உண்டாகிறது.

தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், செல்போன்களை நீண்ட நேரம் கூர்ந்து கவனிக்கும்போது கண்களுக்கு அழுத்தம் உண்டாகிறது. அதோடு காற்று மாசுபாடு, மனஅழுத்தம் போன்றவைகளும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒருசில எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

இரு கண்களின் பார்வையையும் மூக்கின் மீது பதிய வைக்க வேண்டும். கவனத்தை எங்கும் திசை திருப்பாமல் சில நிமிடங்கள் மூக்கையும், சில நிமிடங்கள் தொலைவில் உள்ள ஏதாவது ஒரு பொருளையும் மாறி மாறி உற்றுநோக்க வேண்டும். கண்களின் பார்வை மூக்கின் மீதும், பொருளின் மீதும் மாறி, மாறி பதியுமாறு இந்த பயிற்சியை செய்ய வேண்டும். சில நிமிட நேர பயிற்சிக்கு பிறகு கண்களை கைகளால் மூடி, ஓய்வு கொடுக்க வேண்டும். தொடர்ந்து இந்த பயிற்சிகளை செய்து வருவது பார்வை நரம்புகளை வலுப்படுத்தும்.

கைவிரல்களை கொண்டும் மசாஜ் செய்ய வேண்டும். கண்களை மூடி மென்மையாக விரல்களால் மசாஜ் செய்துவர வேண்டும். கண் இமைகள் மீதும் விரல்களை பதித்து லேசாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தலையை அசைக்காமல் மேலும் கீழும் கண்களை சுழலச் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து கண்களை இடதுபுறமாகவும் பின்பு வலதுபுறமாகவும் சுழற்ற விட்டும் பயிற்சி செய்ய வேண்டும். இடையிடையே கண்களை மூடித் திறக்க வேண்டும்.

கண்கள் சோர்வாக இருந்தால், இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு சுடுநீரில் காட்டன் துணியை முக்கி கண்களை மூடி அதன் மேல் ஒத்தடம் கொடுக்கலாம்.

கண்களை சில வினாடிகள் மூடிக்கொண்டும், சில வினாடிகள் திறந்தும் தொடர்ந்து பயிற்சி செய்து வரலாம்.

தினமும் சிறிது நேரம் பயிற்சி செய்து வந்தாலே போதும். இந்த மாதிரியான பயிற்சிகளை கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டும்.

Next Story