காணாமல்போன நிலா-சுபா


காணாமல்போன நிலா-சுபா
x
தினத்தந்தி 11 Feb 2018 12:46 PM IST (Updated: 11 Feb 2018 12:46 PM IST)
t-max-icont-min-icon

அந்த வீடு பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையை ஒட்டியிருந்த உள் தெருவில் அமைந்திருந்தது. அருண் பைக்கை நிறுத்தும்போதே அந்தச் சாலையில் பல கார்கள் நிறுத்தப்பட்டிருப்பதை கவனித்தான்.

ந்த வீடு பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையை ஒட்டியிருந்த உள் தெருவில் அமைந்திருந்தது. அருண் பைக்கை நிறுத்தும்போதே அந்தச் சாலையில் பல கார்கள் நிறுத்தப்பட்டிருப்பதை கவனித்தான்.

“இது ரொம்ப காஸ்ட்லி ஏரியா. வசதியானவங்கதான் இங்க வீடு வாங்குவாங்க..!”

காம்பவுண்ட் சுவரில் பொருத்தப்பட்டிருந்த ‘மோகன்’ என்ற பித்தளைப் பெயர்ப் பலகைக்கு இரண்டு குடை விளக்குகள் அபாரமாக வெளிச்சமூட்டின. அந்த சுவரையொட்டி, உள்ளே உயரம் உயரமாக அசோக மரங்கள் காற்றில் சலசலத்தன. வீட்டுக்குள் இருந்து கலகலவென்ற சிரிப்பொலி கேட்டது.

தன் உடைகளை குனிந்து பார்த்துக்கொண்டு, சிறு தயக்கத்துடன் கேட்டைத் தள்ளித் திறந்தான் அருண்.

கிட்டத்தட்ட பத்தடிக்கு இரு புறமும் புல்வெளி. நடுவில் நடந்து வருவதற்காக கான்கிரீட் சதுரங்கள் பதித்த பாதை. கேட் திறக்கும் ஒலி கேட்டு, வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்தான் மோகன்.

ஊதிய முகமும், சருமத்தில் பணத்தால் ஏறிய பள பளப்பும் கூடி, கல்லூரியில் பார்த்ததைவிட மிக செழுமையாக இருந்தான். முடி உதிர்ந்து முன் வழுக்கை விழுந்திருந்தது. இரு கைகளையும் விரித்து ஓடிவந்து அருணைக் கட்டிக்கொண்டான்.

“எவ்ளோ வருஷம் ஆச்சுடா, உன்னைப் பார்த்து..! வா.. வா..! வாங்க சிஸ்டர்..!” என்று வாய் நிறைய பூர்ணிமாவையும் வரவேற்றான்.

பூர்ணிமா கண்களால் வீட்டை அருந்திக்கொண்டே மெல்ல அவர்களுக்குப் பின்னால் நடந்து வீட்டுக்குள் போனாள்.

“கல்பனா, இங்க வா..!” என்று மோகன் அழைத்ததும், உள்ளறையிலிருந்து நடந்து வந்த பெண்மணி, பூர்ணிமாவைவிட ஓரங்குலம் உயரம் குறைவாகவே இருந்தாள். ஆனால், பெண்களுக்கு அழகூட்டும் நிலையம் போகிறவள் என்பதை திருத்திய புருவங்களும், மெலிதாக மையிட்ட கண்களும், பாப் செய்த தலைமுடியும், பளபளவென்ற முகமும் பறைசாற்றின. தோளிலிருந்து நழுவிவிடும் போல வழவழப்பான சேலையில் ஒய்யாரமாக வந்து நின்றாள்.

“கல்பூ..! இது அருண்..! என்னுடைய காலேஜ்மேட். இவன் இல்லேன்னா, நாலு சப்ஜெக்ட் கூட பாஸ் பண்ணியிருக்க மாட்டேன்..”

அருண் அகலமாகப் புன்னகைத்து, “இது பூர்ணிமா, என் மனைவி..” என்று அறிமுகம் செய்தான்.

“சிஸ்டர், எங்க ப்ரெண்ட்ஸ் எல்லாருடைய மனைவிங்களும் உள்ளறையிலதான் இருக்காங்க.. என் மனைவி உங்களுக்கு கம்பெனி குடுப்பா..” என்று சொல்லிவிட்டு..

“வா, மொட்டை மாடியிலதான் பசங்கல்லாம் கூடியிருக்காங்க..” என்று அருணின் கையைப் பிடித்து மோகன் இழுத்தான்.

“ஜோடியா வந்தாகூட, நண்பர்களைப் பார்த்துட்டா, இந்த ஆம்பளைங்க தனியா பிச்சுக்கிட்டு போறதுக்குதான் பார்ப்பாங்க. கம்..!” என்று பூர்ணிமாவை உள்ளே கூட்டிப் போனாள் கல்பனா.

உள்ளறைச் சுவரில் அலங்காரமான வண்ண ஓவியம். அதற்கென்று பிரத்யேகமான விளக்கு வெளிச்சம். பெரிய கண்ணாடி மேஜை. சுற்றிலும் ஆறு நாற்காலிகள். அங்கு கூடியிருந்த மற்ற பெண்களும் வசதியாகத் தெரிந்தார்கள். அறிமுகங்கள் நடந்தன.

பூர்ணிமா பொருந்தாமல் அமர்ந்தாள். முன்பின் தெரியாதவர்கள் மத்தியில் திடீரென்று தன்னை தனிமைப்படுத்திவிட்டுப் போய்விட்ட அருண் மீது கோபமாக வந்தது.

என்ன பேசுவது என்று புரியாமல், “வீடு இப்பதான் கட்டினதா..?” என்றாள்.

“இல்ல.. அதாச்சு, அஞ்சு வருஷம்..”

“மொத்தம் மூணு மாடியில்ல..? பெரிய குடும்பமா..?”

“சீச்சீ..! நானும், மோகனும் மட்டும்தான். முதல் மாடியை ஒருத்தருக்கும், இரண்டாவது மாடியை இன்னொருத்தருக்கும் வாடகைக்கு விட்டிருக்கோம்..”

மொட்டை மாடியில் கல்லூரி நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, குதூகலமாக சிரித்து, கட்டிப் பிடித்து, இரைச்சலாக சிரித்துக்கொண்டிருந்த ஒலி கேட்டது.

“இந்தாங்க.. பஜ்ஜி எடுத்துக்குங்க..” என்று ஒருத்தி தட்டை நீட்ட, பூர்ணிமா ஏதோ கவனத்துடன் அதை வாங்கும்போது, தட்டு சட்டென கவிழ்ந்து அதிலிருந்த தக்காளி சட்னி பூர்ணிமாவின் மடியில் கொட்டியது.

“ஓ..! கம், கம்..! பாத்ரூம்ல க்ளீன் பண்ணிக்கலாம்..” என்று கல்பனா அவளை உள்ளே பாத்ரூமுக்குக் கூட்டிச் சென்றாள்.

பாத்ரூம் போல இல்லை அது. பூஜையறை போல் பளபளவென்றிருந்தது. உயர் ரக டைல்ஸ்கள் பதிந்திருந்தன. சுவரில் ஓங்கி உயர்ந்து வளர்ந்த குழாயிலிருந்து பல கிளைகள் அங்கங்கே பிரிந்திருந்தன.

“இது என்ன..?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் பூர்ணிமா.

“இட்டாலியன் ஷவர். நமக்கு வேணும்ங்கற ஸ்பீட்ல வெச்சுக்கலாம். என்ன சூட்டுல தண்ணி வேணுமோ, எல்லாத்தையும் செட் பண்ணிட்டோம்னா, அது பாட்டுக்கு கரெக்டா மெயின்டெயின் பண்ணிட்டு இருக்கும்..”

“ஓ..!”

அங்கிருந்த பளிங்கு வாஷ்பேசின், பின்னால் பதித்திருந்த அபாரமான கண்ணாடி, எல்லாவற்றையும் பிரமிப்போடு பார்த்துவிட்டு, வெளியில் வந்தாள் பூர்ணிமா.

“பாத்ரூமே இவ்வளவு சூப்பரா இருந்ததுன்னா, கிச்சன் இன்னும் நல்லா இருக்குமில்ல..?” என்றாள். சொல்லிவிட்டு, அல்பத்தனமாக உளறிவிட்டோமோ என்று சட்டென்று கல்பனாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

“கிச்சனை பார்க்கறீங்களா..? கம்..!” என்று அவளை சமையலறைக்குக் கூட்டிப் போனாள் கல்பனா.

மிக விஸ்தாரமான சமையலறை. சமையலுக்கு உதவியான எல்லாவித நவீன கருவிகளும் பொருத்தப்பட்டிருந்தன. சுவரோடு பதித்திருந்த கதவைத் திறந்து, “இது ஸ்டோர் ரூம். இங்கதான் பொருள்லாம் வெச்சுப்போம்..” என்றாள்.

இரண்டு படுக்கையறைகளையும் அவள் அடுத்து காட்டினாள். பூர்ணிமா பெண்களுடன் அந்த வீட்டைப் பார்த்து பிரமித்துக்கொண்டிருந்த அதே நேரம்...

மொட்டை மாடியில் அருணும் சற்று நிலையில்லாமல் இருந்தான். நண்பர்களின் கோப்பைகளில் உயர் ரக மது ஊற்றப்பட்டிருந்தது.

“எனக்கு வேணாம்..” என்றான் அருண். “ஒண்ணா கூடி தண்ணியடிச்சவங்களாலதான் இப்ப நடுத்தெருவுக்கே வந்துட்டேன், நான்..” என்று தர்மசங்கடமாகச் சிரித்தான்.

“அதுக்காகவா உம்முனு இருக்கே..?” என்றான் மோகன்.

“இல்லடா.. என் மனைவியை தனியா விட்டுட்டு வந்துட்டோமேனு யோசனையா இருக்கு..”

“பெண்கள் சட்டுனு ஒட்டிப்பாங்க, நீ கவலையை விடு..”

“மோகன், கேக்கறேன்னு தப்பா நினைக்காதே.. எப்படி இவ்வளவு பெரிய வீடு கட்டினே..?”

“பிசினஸ்ல கொஞ்சம் பணம் சேர ஆரம்பிச்சது. அப்பா ஏற்கனவே வாங்கிப் போட்ட இடம் ஒரு கிரவுண்டு பெசன்ட் நகர்ல இருக்குன்னு தெரியும். சும்மா விட்டா, எவனாவது குடிசை போட்டு அடாவடியா உட்கார்ந்துருவான். அதனால, ஒரு சின்ன போர்ஷனை கட்டிட்டு வரலாம்னு நெனைச்சேன். ‘கட்டும்போதே பேங்க்ல லோன் வாங்கி ரெண்டு போர்ஷனை கூடுதலாக் கட்டுங்க.. அந்த போர்ஷனை வாடகைக்கு விடுங்க.. அதுல வர வாடகையை வெச்சே கடனுக்கான மாசத் தவணையை கட்டி கடனை அடைச்சிரலாம்’னு என் மாமனார் ஐடியா கொடுத்தாரு.. அந்த தைரியத்துல மூணு குடியிருப்பா கட்டினேன். ரெண்டு மாடியையும் வெவ்வேற கம்பெனிங்களுக்கு லீஸுக்கு விட்டிருக்கேன்.. டாண்ணு ஒண்ணாம் தேதி கணக்குல பணம் கட்டிடறாங்க.. பிசினஸ்ல கூடுதலா வர பணத்தையும் அப்பப்ப கட்டிட்டு வந்தேன்.. போன மாசம்தான் லோன் முழுசா அடைஞ்சுது.. சொல்லப்போனா, அதைக் கொண்டாடறதுக்காகதான் இந்த சந்திப்பே ஏற்பாடு பண்ணேன்..”

“நீ காலேஜ் முடிச்சவுடனே கல்யாணம் பண்ணிக்கிட்டே.. நான் கொஞ்சம் செட்டில் ஆனப்புறம் பண்ணணும்னு லேட் பண்ணிட்டேன். சொந்த வீடு பத்தி இப்பதான் யோசிக்கறேன்..” என்று அருண் சற்று ஏமாற்றத்துடன் சொன்னான்.

“டேய், சொந்த வீடெல்லாம் பெரிய விஷயமே இல்ல.. கரெக்டா திட்டம் போட்டு கட்டி, பாதி வீட்டை வாடகைக்கு விட்டோம்னா, வர வாடகையே கடனை அடைச்சிடும். வலியில்லாம வீடு நமக்கு சொந்தமாயிடும்..”

அதற்குள், அவனுடைய போன் ஒலித்தது. “என் மனைவி கல்பனாதான்.. டின்னருக்கு டயமாச்சு, கீழ வாங்கனு சொல்றா..”

“நாம இங்க தண்ணியடிச்சிட்டு செட்டில் ஆயிடப்போறோமேன்னு லேடீஸுக்கு பயம்..” என்று வெங்கட் ஓங்கிச் சிரித்தான்.

***

சந்திப்பு முடிந்து, உணவருந்திவிட்டு, இரவு புறப்பட பதினோரு மணிக்கு மேலாகிவிட்டது.

கடற்கரைச் சாலையில் பைக் நுழைந்ததும், “அருண், அடுத்த வருஷம் சொந்த வீட்டுக்குப் போயே ஆகணும். அதுக்கு எப்படி திட்டமிடலாம்னு பீச்சுல கொஞ்சம் உக்காந்து பேசுவோம்..” என்று பூர்ணிமா மிக உறுதியான குரலில் சொன்னாள்.

- தொடரும்.

Next Story