ரெயில்வே தண்டவாள பாதையை அடைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


ரெயில்வே தண்டவாள பாதையை அடைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 12 Feb 2018 3:30 AM IST (Updated: 11 Feb 2018 10:24 PM IST)
t-max-icont-min-icon

எர்ணாவூரில் ரெயில்வே தண்டவாள பாதையை அடைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் மற்றும் அதை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட நகர்களில் வசிக்கும் மக்கள், கிழக்கு பகுதியில் ஒத்தவாடையில் உள்ள சுடுகாடு மற்றும் சுனாமி குடியிருப்பில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எர்ணாவூர் ரெயில்வே தண்டவாள பாதையை கடந்து சென்று வந்தனர்.

இதேபோல் சுனாமிநகர், ஆல்இந்தியா ரேடியோ நகர் உள்ளிட்ட பல நகர்களில் இருந்து மார்க்கெட் மற்றும் பள்ளிக்கு செல்ல எர்ணாவூர் பகுதிக்கு இந்த ரெயில்வே தண்டவாள பாதையை கடந்து வந்து சென்றனர்.

இந்த பகுதியில் அடிக்கடி மின்சார ரெயில் மற்றும் விரைவு ரெயில்களில் வந்து செல்வதால் விபத்துகள் ஏற்படுவதாக கூறி ரெயில்வே நிர்வாகம் பொதுமக்கள் சென்று வந்த ரெயில்வே தண்டவாள பாதையை அடைக்க முயன்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி பொதுமக்கள், பாதையை அடைக்கக்கூடாது என்று கூறி அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சரவணன் தலைமையில் வடசென்னை எம்.பி. வெங்கடேஷ்பாபுவை சந்தித்து அவரது எம்.பி. நிதியில் இருந்து இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க நிதி பெற்று தருவதாகவும், அதுவரை பாதையை அடைக்க வேண்டாம் என்றும் ரெயில்வே அதிகாரிகளிடம் கூறினர்.

அதை ஏற்று ரெயில்வே நிர்வாகத்தினர் தற்காலிகமாக ரெயில்வே பாதையை மூடும் பணியை கைவிட்டனர்.

இந்த நிலையில் சம்பந்தபட்ட இடத்தை திருவொற்றியூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி. நேரில் சென்று பார்வையிட்டார். இதுபற்றி சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் எடுத்து கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

Next Story