சீரமைக்கப்படாமல் கிடக்கும் மின்சார இணைப்பு பெட்டிகள்


சீரமைக்கப்படாமல் கிடக்கும் மின்சார இணைப்பு பெட்டிகள்
x
தினத்தந்தி 12 Feb 2018 3:45 AM IST (Updated: 11 Feb 2018 10:32 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பூரில் சீரமைக்கப்படாமல் கிடக்கும் மின்சார இணைப்பு பெட்டிகளை பொதுமக்கள் மின்சார வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வடகிழக்கு பருவ மழை பெய்தது. அப்போது கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர்.நகர் பகுதியில் மழைநீர் தேங்கி கிடந்தது. இந்த மழை நீரில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை மிதித்த 2 சிறுமிகள் மீது மின்சாரம் தாக்கியதால் தூக்கி எறியப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமிகள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அப்பகுதியில் ஆபத்தான நிலையில் திறந்து கிடந்த மின்சார இணைப்பு பெட்டி தான் சிறுமிகள் இறப்புக்கு காரணம் என்று பொதுமக்கள் புகார் கூறினார்கள். உடனடியாக சென்னை மாநகரில் உள்ள அனைத்து மின்சார இணைப்பு பெட்டிகளும் உடனடியாக சீரமைத்து பாதுகாப்பான முறையில் அமைக்கப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்தது.

ஆனால் 3 மாதங்கள் கடந்த நிலையில் தற்போதும் மின்சார இணைப்பு பெட்டிகள் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆபத்தான முறையில் திறந்து கிடக்கின்றன.

குறிப்பாக பெரம்பூர், புதிய வாழைமாநகர் முதல் தெருவில் ஆபத்தான நிலையில் மின்சார இணைப்பு பெட்டி திறந்து கிடக்கிறது. அவ்வழியாக பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் குழந்தைகள் அச்சத்துடனே செல்கின்றனர். மின்சார விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பாக ஆபத்தான நிலையில் கிடக்கும் மின்சார இணைப்பு பெட்டிகளை முறையாக மூடி வைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மின்சார வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story