அருமனையில் மறியல்– கல்வீச்சு: 112 பேர் மீது வழக்கு; 8 பேர் கைது


அருமனையில் மறியல்– கல்வீச்சு: 112 பேர் மீது வழக்கு; 8 பேர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2018 3:45 AM IST (Updated: 12 Feb 2018 12:09 AM IST)
t-max-icont-min-icon

அருமனையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கல்வீசிய சம்பவம் தொடர்பாக 112 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

அருமனை,

குமரி மாவட்டம் அருமனை மேலத்தெரு பகுதியில் அருமனை போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்திக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ராஜேஷ் (வயது29) என்பவர் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் போலீசார் அவரது கையை பிடித்து இழுத்து, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராஜேஷ் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அருமனையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தக்கலை உதவி போலீஸ் சூப்பிரண்டு அபினவ் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படவில்லை. இதனால், போலீசார் தடியடி நடத்தினார்கள். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் நாலா புறமும் சிதறி ஓடினார்கள். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். இந்த கல்வீச்சில் அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ்சின் கண்ணாடி நொறுங்கியது.

போலீசார் தடியடி, கல்வீச்சு போன்ற சம்பவங்களால் அந்த பகுதி போர்களம் போல் மாறியது. நிலைமை கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு  சென்றனர். இதையடுத்து போலீசார் சிலர் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

மறியல், கல்வீச்சு, மற்றும் போலீசாரை தரக்குறைவாக பேசியது போன்ற சம்பவங்கள் தொடர்பாக அருமனை பகுதியை சேர்ந்த லிஜின், ஆபிரகாம், குஞ்சாலுவிளையை சேர்ந்த குமார், திருவரம்பு பகுதியை சேர்ந்த சதீஷ், அஜின்மோன், குழிச்சலை சேர்ந்த சுரேஷ், மேலத்தெருவை சேர்ந்த சிபுராஜ், வினு, ஜெஸ்சிலி, செல்வராஜ், ஜஸ்டின்ராஜ், ஆன்சியோ ஆகிய 12 பேர் மீதும் மற்றும் கண்டால் தெரியும் 100 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்களில் லிஜின், குமார், சதீஷ், சுரேஷ், சிபுராஜ், வினு, ஜஸ்டின்ராஜ், ஆன்சியோ ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.  

மேலும், அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story