குண்டும்-குழியுமாக காணப்படும் பெரம்பலூர்-துறையூர் பிரதான சாலை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


குண்டும்-குழியுமாக காணப்படும் பெரம்பலூர்-துறையூர் பிரதான சாலை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Feb 2018 4:00 AM IST (Updated: 12 Feb 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

குண்டும்-குழியுமாக காணப்படும் பெரம்பலூர்-துறையூர் பிரதான சாலையை விரைந்து சீரமைக்க குரும்பலூர் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் இருந்து துறையூர் 38 கி.மீ. தொலைவில் உள்ளது. அரியலூர், ஜெயங்கொண்டம், கும்பகோணம், பெண்ணாடம் ஆகிய பகுதிகளில் இருந்து சிமெண்டு மூட்டைகள் ஏற்றிய லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் தினந்தோறும் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் பெரம்பலூர் சுற்று வழிச்சாலையை கடந்து துறையூர் மற்றும் நாமக்கல் பகுதிகளுக்கு செல்கின்றன. அம்மாபாளையம், லாடபுரம், களரம்பட்டி, மேலப்புலியூர் பகுதிகளில் இருந்து பெரம்பலூருக்கு பள்ளி பஸ்களும் மற்றும் துறையூர் மார்க்கத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் கல்லூரி பஸ்களும் இயக்கப்படுகின்றன.

பெரம்பலூரில் இருந்து தினமும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரம்பலூர் நகரில் இருந்து திருப்பெயர், நாவலூர், மேலப்புலியூர் பகுதிகளுக்கு மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

எப்போதும் அதிகமான எண்ணிக்கையில் சென்று வரும் பெரம்பலூர்-துறையூர் பிரதான சாலை செஞ்சேரியில் தொடங்கி பாளையம், குரும்பலூர் பேரூராட்சி, ஈச்சம்பட்டி, அம்மாபாளையம், களரம்பட்டி வரை கடந்த பல மாதங்களாக குண்டும்-குழியுமாக மாறி போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால் வாகனங்களில் பயணம் செய்வோருக்கும், வாகனங்களை இயக்குவோருக்கும் முதுகு தண்டுவடப்பகுதி பாதிக்கப்படுகிறது. மேலும் பள்ளி அலுவலக நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக் கடி ஏற்பட்டுவருகிறது.

இந்த மோசமான தார்ச்சாலையை மேம்படுத்தி புதிய தார்ச்சாலை அமைக்கவேண்டும் என்று குரும்பலூர் பேரூராட்சி பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலைத்துறையினருக்கும் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தார்ச்சாலை சீரமைக்்கப்படவில்லை. இதனால் பெரம்பலூர்-துறையூர் இடையே சென்று வரும் கார்கள், இலகுரக வாகனங்களில் செல்வோர், செஞ்சேரி, செட்டிக்குளம், நக்கசேலம் வழியாக அல்லது பொம்மனப்பாடி, மங்கூன் வழியாக துறையூருக்கு சுற்றி சென்றுவரும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் புறநகரில் அமைந்துள்ள சுற்று வழிச்சாலையில் இருந்து துறையூர் செல்லும் சாலையில், செஞ்சேரியில் தற்போது சாலையை அகலப்படுத்தும் பணிகளும் மற்றும் செஞ்சேரி, ஈச்சம்பட்டி, அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் கல்வெட்டு பாலங்கள் கட்டுமானப்பணிகளும் நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குரும்பலூரில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அரசு மேல்நிலைப்பள்ளி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பேரூராட்சி அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன. ஈச்சம்பட்டி, புதுஆத்தூர், மேட்டாங்காடு, திருப்பெயர் கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகள் கல்லூரிக்கும், பள்ளிக்கும் அன்றாடம் குரும்பலூர் வந்து செல்ல வேண்டி உள்ளது. விவசாயிகள், பட்டா, சிட்டா பெறுதல் அல்லது வருவாய்த்துறை தொடர்பான விபரங்களை பெற குரும்பலூர் வந்து செல்ல வேண்டியுள்ளது. இந்தசாலையில் நடந்து செல்வதும், சைக்கிளில் சென்று வருவதும் கடினமாக உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழையினால் குண்டும், குழியுமாக மாறிவிட்ட இந்த சாலையை புதிய தார்ச்சாலையாக அமைப்பதற்கு முன்பாக தற்காலிகமாக சீரமைத்திட (பாட்சு ஒர்க்) மாவட்ட கலெக்டர் பரிசீலனை செய்து குரும்பலூர் பகுதியில் மேம்படுத்தப்பட்ட தார்ச்சாலை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று குரும்பலூர் பேரூராட்சி மக்களும், அம்மாபாளையம் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story