டாஸ்மாக் பார்களை ஏலம்விட வேண்டும், பணியாளர் சங்கம் கோரிக்கை


டாஸ்மாக் பார்களை ஏலம்விட வேண்டும், பணியாளர் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Feb 2018 3:15 AM IST (Updated: 12 Feb 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

மது அருந்தும் கூடங்களை நடத்த ஏலம் விட வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் கூறினார்.

ராஜபாளையம்,

டாஸ்மாக் ஊழியர்களின் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் மண்டல மேலாளர் அலுவலகங்களில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக டாஸ்மாக் தலைமை மேலாண்மை இயக்குனருடன் டாஸ்மாக் சங்க மாநில தலைவர் பால்பாண்டியன், பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ராஜாமுனி மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை குறித்த விளக்க கூட்டம் ராஜபாளையத்தில் தாலுகா தலைவர் ராமசுப்பு தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ராஜபேகன் வரவேற்று பேசினார். முத்துகணேசன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற உத்தரவின்படி 1,000 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. அதில் பணிபுரிந்த ஊழியர்கள் மற்ற மதுபான கடைகளுக்கு பணியமர்த்தபட்டனர். இதனால் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இடையே மோதல் போக்கு தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. மேலும் மாவட்டத்தில் அரசு மதுபான கடையுடன் இணைந்து செயல்பட்டு வரும் மது அருந்தும் கூடங்கள் தற்போது வரை சட்ட விரோதமாக எந்தவித உரிமம் இன்றி செயல்பட்டு வருகின்றன. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு உடனடியாக மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் அவற்றை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 500 அரசு மதுபானக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பால் அதில் பணிபுரிந்து வரும் பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி உள்ளது. எனவே டாஸ்மாக் நிர்வாகம் மதுபான கடைகள் மூடப்படும் தருவாயில் அதில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் பணி வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை டாஸ்மாக் தலைமை நிர்வாகத்திடம் கோரியுள்ளோம். இவ்வாறு கூறினார். முடிவில் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார். 

Next Story