திருவாரூர் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 759 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்


திருவாரூர் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 759 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 12 Feb 2018 4:15 AM IST (Updated: 12 Feb 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 759 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்.

திருவாரூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப்-4 தேர்வு நேற்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் 91 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி, வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை கலெக்டர் நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் நிர்மல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-4 தேர்வு திருவாரூர் மாவட்டத்தில் 91 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்விற்கு 33 ஆயிரத்து 633 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 28 ஆயிரத்து 759 பேர் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 874 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின் வினியோகம் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இதே போல தேர்வு மையங்களுக்கு செல்வதற்காக சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது. தேர்வினை கண்காணிக்க 13 பறக்கும் படை அலுவலர்கள், 20 சுற்றுக்குழு அலுவலர்கள், 115 கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் ஈடு படுத்தப்பட்டனர். மேலும் தேர்வு முழுவதும் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு தரை தளத்தில் தேர்வு எழுத வசதியும், பார்வையற்றோர் தேர்வு எழுதிட மாற்று நபர் தனி அறைகள் கொண்ட வசதியும் செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, தாசில்தார் ராஜன்பாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.

திருமக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று குரூப்-4 தேர்வு நடந்தது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருமக்கோட்டை போலீசார் செய்து இருந்தனர். 

Next Story