கொலையான வாலிபரை அடையாளம் காண தீவிரம்: மாயமானவர்களின் பட்டியலை பெற்று போலீசார் விசாரணை


கொலையான வாலிபரை அடையாளம் காண தீவிரம்: மாயமானவர்களின் பட்டியலை பெற்று போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Feb 2018 3:45 AM IST (Updated: 12 Feb 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

கொலையான வாலிபரை அடையாளம் காணும் முயற்சியில் மாயமானவர்களின் பட்டியலை பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பக்கத்து மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்,

கரூர் அருகே புலியூர் வடக்குப்பாளையத்தில் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரை கொடூரமாக தாக்கியும், அடித்தும் கொலை செய்ததற்கு அடையாளமாக ரத்தக்கறை அவரது சட்டையில் படிந்திருந்தது. மேலும் முகத்தில் தாடையில் பிளவு ஏற்பட்டிருந்தது.

கொலையானவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபரின் உடல் கரூர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் உள்ளது.

இடது கையில் பச்சை

பிணமாக கிடந்தவரின் இடது கையில் கே.எஸ். தன்யா ஸ்ரீ ஏ என்ற பெயரில் பச்சை குத்தப்பட்டுள்ளது. அதனை ஒரு அடையாளமாக வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கரூர் மாவட்டப்பகுதியில் மாயமானவர்கள் பற்றி போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவிக்கப்பட்ட பட்டியலை பெற்று விசாரித்து வருகின்றனர். மேலும் திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பக்கத்து மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும் கொலையான வாலிபரின் புகைப்படத்தை அனுப்பி தகவல் தெரிவித்துள்ளனர்.

கொலையான வாலிபரை காணவில்லை என வேறு எங்காவது போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் விசாரிக்கின்றனர். இதில் நேற்று வரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகள்

கொலையான வாலிபர் யார்? என கண்டறியப்பட்ட பின்பு தான் கொலைக்கான காரணமும், அவரை கொலை செய்த நபர்கள் பற்றியும் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இருப்பினும் கொலையாளிகள் யார்? என்பதை கண்டறிய தொழில்நுட்ப வசதி முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

Next Story