பாரதீய ஜனதா அரசின் கடைசி பட்ஜெட் மக்களை கடுமையாக வஞ்சித்து விட்டது ப. சிதம்பரம் பேச்சு


பாரதீய ஜனதா அரசின் கடைசி பட்ஜெட் மக்களை கடுமையாக வஞ்சித்து விட்டது ப. சிதம்பரம் பேச்சு
x
தினத்தந்தி 12 Feb 2018 4:30 AM IST (Updated: 12 Feb 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

பாரதீய ஜனதா அரசின் கடைசி பட்ஜெட் மக்களை கடுமையாக வஞ்சித்து விட்டது என்று முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் கூறினார்.

திருச்சி,

2018-19ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தயாரிக்க தொடங்கியபோது உலக பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருந்தது. ஆனால் இந்திய பொருளாதாரம் கடந்த 3 ஆண்டுகளாக இறங்குமுகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் இந்த அரசு வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்த 10 நாட்களில் இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் இந்த அரசு 3 முக்கிய சவால்களை சந்திக்கவேண்டியது இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார். கல்வி மற்றும் சுகாதாரம், வேளாண்மை துறை, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உள்ள சவால்களை எப்படி சந்திப்பது என்பது பற்றி பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு அடுத்த படியாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். ஆனால் இந்த அரசு இந்த துறைகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது வேளாண்மை துறை நாளுக்கு நாள் கீழே போய்க்கொண்டு இருக்கிறது. ஊரக பகுதிகளில் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தற்கொலை செய்து உள்ளனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் சரக்கு சேவை வரியால் சிறு மற்றும் நடுத்தர வகை தொழில்கள் கடுமையாக நலிவடைந்து போய் உள்ளது. இதனால் ஏராளமானவர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். இந்த பட்ஜெட்டினால் எந்த வகையான மக்களுக்கும் எந்த வகையிலும் பலன் இல்லை.

வருவாய் கணக்கு பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, பணவீக்கம் ஆகிய 3 காரணங்களால் இந்திய பொருளாதாரமானது ஸ்திரத்தன்மை இன்றி தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இந்திய அரசு ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களின் மூலம் ரூ.85 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறது. இந்த தொகை எந்தவித முதலீட்டு திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படாமல் ஊதாரித்தனமாக செலவிடப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை அதிக பட்சமாக ரூ.147 டாலர் என இருந்த போது கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 63 டாலராக உள்ள போது பெட்ரோல் விலை ரூ.75 ஐ தாண்டி விட்டது. அரசுக்கு நிதி தேவை என்றால் உடனடியாக கலால் வரி மூலம் பெட்ரோல், டீசல் விலையை தான் உயர்த்துகிறார்கள். இதனால் நடுத்தர, ஏழை மக்கள் கடுமையான பாதிப்பை அடைந்து இருக்கிறார்கள்.

இதை எல்லாம் மறைக்க 70 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, 50 கோடி மக்களுக்கு காப்பீடு திட்டம் என பொய்யான வாக்குறுதிகளை அளித்து இந்த அரசு வாணவேடிக்கை காட்டுகிறது. மொத்தத்தில் பாரதீய ஜனதா அரசின் இந்த கடைசி பட்ஜெட் அனைத்து மக்களையும் கடுமையாக வஞ்சித்து விட்டது.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story