4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Feb 2018 3:30 AM IST (Updated: 13 Feb 2018 12:00 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி கடற்கரையில் 4 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 35), சிவசேனா நகர தலைவராக  உள்ளார். இவர் கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரையில் பேன்சி கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்பு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் கடையை திறக்க சென்ற போது,  கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. மேலும், கடையில்  இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. உள்ளே சென்று பார்த்த போது, மேஜையும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.6,400 கொள்ளையடிக்க பட்டிருந்தது. இதுபோல், சுபாசின் கடையை அடுத்துள்ள 3 கடைகளிலும் கொள்ளை நடந்துள்ளது.

அஞ்சுகூட்டுவிளையை சேர்ந்தவர் குணசேகர் (45). இவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ரூ.2500–ஐ திருடி சென்றுள்ளனர்.

பூங்குளத்துவிளையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (57) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் இருந்த ரூ.400 கொள்ளை போய் இருந்தது.

சிலுவை நகரை சேர்ந்தவர் வின்ஸ்டன் (52). இவரது பேன்சி கடையில் பணம் இல்லாமல் இருந்தது. இதனால், கொள்ளையர்கள் அங்கிருந்த சில பொருட்களை எடுத்து சென்றனர்.

நேற்று காலையில் கடைக்கு வந்த வியாபாரிகள் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

கன்னியாகுமரியில் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் கடற்கரை பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருக்காது. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து உள்ளனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை கன்னியாகுமரி போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story