தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது


தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது
x
தினத்தந்தி 13 Feb 2018 4:30 AM IST (Updated: 13 Feb 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். திருச்சியிலும் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.

நாமக்கல்,

தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமாக மொத்தம் 7,500 கியாஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இவற்றில் 4,500 டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 3 ஆயிரம் டேங்கர் லாரிகள் புதிய டெண்டரை எதிர்நோக்கி உள்ளன.

இந்த டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சமையல் எரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு (பாட்டிலிங் பிளாண்டு) கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கான வாடகையை ஆயில் நிறுவனங்கள் ஒவ்வொரு 3 ஆண்டுக்கும் மண்டல வாரியான டெண்டர் மூலம் நிர்ணயம் செய்து வந்தது.

இந்தநிலையில் புதிய வாடகை டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி அறிவித்தது. மேலும் மண்டல வாரியாக நடத்தப்பட்ட டெண்டர் நடைமுறையில் மாற்றம் செய்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி டெண்டர் என்ற புதிய முறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மாநிலம் வாரியாக நடத்தப்படும் டெண்டர் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை திரும்பபெற வலியுறுத்தியும் நேற்று முதல் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் தொடங்கி உள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் எரிவாயுவை நிரப்பும் மையங்களுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இந்த லாரிகளில் டிரைவர் மற்றும் கிளனராக பணிபுரியும் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்களும் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம், செயலாளர் கார்த்திக் ஆகியோர் கூறியதாவது:-

மாநில அளவிலான டெண்டர் முறையை கைவிடவேண்டும். மண்டல வாரியான டெண்டரை தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்களில் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். எங்களின் போராட்டம் காரணமாக காலை 6 மணி முதல் சுமார் 4,200 கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படவில்லை.

இதனால் நாள் ஒன்றுக்கு கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.2 கோடி வாடகை இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டலத்திலும் சுமார் 4,300 கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படவில்லை.

எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கியாஸ் கொண்டு செல்லும் பணி நிறுத்தப்பட்டாலும், இன்னும் 5 நாட்களுக்கு பிறகே சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும். எனவே மத்திய அரசு எங்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தென்மண்டலத்தில் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் நீடிக்கும் பட்சத்தில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

திருச்சி இனாம்குளத்தூரில் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் ஐ.ஓ.சி. நிறுவனம் (பாட்டலிங் பிளான்ட்) உள்ளது. இந்த நிறுவனத்துக்கு கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கியாஸ் நிரப்பப்பட்ட டேங்கர் லாரிகள் தினமும் வரும். வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு வந்த லாரிகள் மீண்டும் திரும்பி செல்லவில்லை. அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஓட்டி வந்த டிரைவர்கள் மற்றும் கிளனர்கள் லாரியில் படுத்து ஓய்வு எடுத்து வருகிறார்கள். லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் திருச்சி ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு லாரிகளில் கியாஸ் கொண்டு வருவது நிறுத்தப்பட்டு விடும், இதனால் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்ப முடியாத நிலை ஏற்படும். அதற்கு முன்னதாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story