நான்கு வழிச்சாலையில் இரும்பு தடுப்பு வேலிகளால் விபத்து அதிகரிப்பு


நான்கு வழிச்சாலையில் இரும்பு தடுப்பு வேலிகளால் விபத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 Feb 2018 3:00 AM IST (Updated: 13 Feb 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம்-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் போலீசார் வைக்கும் இரும்பு தடுப்பு வேலிகளால் தினசரி விபத்துகள் நிகழ்வதாக புகார் எழுந்துள்ளது.

மானாமதுரை,

மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. பணிகள் நிறைவுபெற்ற சாலையில் வாகனங்களை இயக்கும்போது ஏற்படும் மாறுதல்களுக்கு ஏற்ப பணிகள் செய்வதற்காக சாலைகள் திறக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் போலீசார் நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்து ஏற்படுவதாக கருதி சாலையின் குறுக்கே இரும்பு தடுப்பு வேலிகள் வைத்துள்ளனர். இந்த இரும்பு தடுப்பு வேலிகளை கடக்க கனரக வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். பேரிகார்டுகளால் கூடுதலாக விபத்துகள் நேரிட்டு வருகின்றன. இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் போலீசார் கண்டு கொள்ளவில்லை. கடந்த 2 தினங்களுக்கு முன்பு அன்னியேந்தலில் வைக்கப்பட்ட இரும்பு தடுப்பு வேலிகளால் 2 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.

இந்தநிலையில் நேற்று கால்பிரவு விலக்கு என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி மீது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஜீப் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ஓட்டுனர் கிட்டு, உதவி கோட்ட பொறியாளர் மல்லிகா ஆகியோர் காயமடைந்தனர். சாலையின் குறுக்கே உள்ள இரும்பு தடுப்பு வேலிகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். பொதுவாக தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலை, ஆறு வழிச்சாலையின் குறுக்கே வேகத்தடை, இரும்பு தடுப்பு வேலி உள்ளிட்டவை வைக்க தடை உள்ளது. ஆனால் அதனை மீறி மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் பெரும்பாலான இடங்களில் இரும்பு தடுப்பு வேலிகளை போலீசார் வைத்துள்ளனர். இதனால் தினசரி விபத்துகள் நேரிடுகின்றன. எனவே விபத்துகள் நிகழாமல் இருக்க தேவையில்லாத இடங்களில் இரும்பு தடுப்பு வேலிகள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story