அண்ணாநகரில் ‘சிக்னல்’ இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல்
அண்ணாநகர் பிரதான சாலையின் முக்கிய சந்திப்புகளில் சிக்னல் இல்லாததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
கோயம்பேடு,
சென்னை அண்ணாநகரில் 2-வது பிரதான சாலை, போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. சாந்தி காலனி சாலை மற்றும் அப்பகுதியில் உள்ள பிரதான மற்றும் நிழற்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த சாலை மையப்பகுதியில் அமைந்துள்ளது.
இதனால் அந்த சாலையின் முக்கிய சந்திப்புகளில் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக ரவுண்டானா பகுதியில் நான்கு புறங்களில் இருந்து வரும் வாகனங்கள், ஒன்றைஒன்று முந்திச்செல்வதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது.
சிக்னல்கள் அகற்றம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக அண்ணா நகர் 2-வது பிரதான சாலை, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை நடந்து வந்த மெட்ரோ சுரங்க ரெயில்பாதை நிறைவடைந்த நிலையில், அண்ணா நகர் 2-வது பிரதான சாலை தற்போது மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.
ஆனால், மெட்ரோ ரெயில் பணியின்போது, அந்த சாலையில் இருந்து அகற்றப்பட்ட போக்குவரத்து சிக்னல், இரு வழி சாலைகளாக மாற்றப்பட்டு பல மாதங்களாகியும் அமைக்கப்படவில்லை. இதனால், அந்த சாலையில், முக்கிய சந்திப்பான ரவுண்டானா உள்ளிட்ட மூன்று சந்திப்புகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எரிபொருள் மிச்சம்
இதுகுறித்து விசாரித்தபோது, இன்னும் சில நாட்களில் ரவுண்டானா பகுதியில், கடைசி கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்க இருப்பதால் மீண்டும் சில நாட்கள் மட்டும் 2-வது பிரதான சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தற்காலிக பணிக்காக போக்குவரத்து மாற்றம் ஏற்பட்டாலும், சிக்னல் அமைக்கும் பணிகளை உடனடியாக செயல்படுத்தினால் நேரம், எரிபொருள் மிச்சமாவதுடன், பரபரப்பு இல்லாமல் பயணிக்கலாம் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story