மாடியில் இருந்து குதித்த வாலிபரால் மூளை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மறுவாழ்வு அப்பல்லோ மருத்துவர்கள் சாதனை
தண்டையார்பேட்டையில் மாடியில் இருந்து குதித்த வாலிபர் சாலையில் நடந்து சென்ற சிறுமி மீது விழுந்ததால் மூளைக்காயம் ஏற்பட்டது. அப்பல்லோ மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சிறுமிக்கு மறுவாழ்வு அளித்து உள்ளனர்.
சென்னை,
சென்னை, தண்டையார்பேட்டை, ஸ்ரீராமுலு தெருவை சேர்ந்த ஸ்ரீதர் - தேவி தம்பதியின் மகள் தன்யஸ்ரீ (வயது 4). கடந்த மாதம் (ஜனவரி) 28-ந்தேதி வீட்டின் அருகே உறவினர் ஒருவருடன் தன்யஸ்ரீ நடந்து சென்றாள். அப்போது, அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து குதித்த வாலிபர் ஒருவர் தன்யஸ்ரீ மீது விழுந்தார். இதில் தன்யஸ்ரீக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே தண்டையார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் சிறுமியை சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், மூளையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல்சிகிச்சைக்காக ஷபி முகமது சாலையில் உள்ள அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைக்கு சிறுமியை மாற்றினர். அங்கு தீவிர அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்து அப்பல்லோ மருத்துவர்கள் சாதனை படைத்து உள்ளனர். தற்போது தன்யஸ்ரீ பூரண குணமடைந்து வருகிறாள்.
இதுகுறித்து குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு மூத்த ஆலோசகர் சுசித்ரா ரஞ்சித் கூறியதாவது:-
மறுவாழ்வு
சிறுமிக்கு மூளைக்காயம் ஏற்பட்டதால் மூளை வீங்கத்தொடங்கியது. இதனால் மூளை மற்றும் மண்டை ஓட்டு பகுதியில் அழுத்தம் உயர்ந்து கொண்டே சென்றது. இதனையடுத்து சிறுமிக்கு அழுத்த கட்டுப்பாடு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்மூலம் மண்டை ஓட்டின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. இதனால் மூளை வீக்கம் தணிந்தது.
சிறுமி ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டதுடன், நரம்பியல் செயல்பாடுகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது தன்யஸ்ரீ படிப்படியாக குணம் அடைந்து வருவதுடன், மறுவாழ்வு அடைந்து விட்டாள். மூளை வீக்கம் முற்றிலும் தணிந்த அடுத்த சில வாரங்களில், மண்டை ஓட்டில் இருந்து அகற்றப்பட்ட பகுதி மீண்டும் பொருத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story