வேலூர் பேராசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


வேலூர் பேராசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 13 Feb 2018 4:30 AM IST (Updated: 13 Feb 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் சலவன்பேட்டையில் பேராசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வேலூர்,

வேலூர் சலவன்பேட்டை அரசமர பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். ஓய்வுப்பெற்ற வருவாய்த்துறை அதிகாரி. இவரது மகன் சந்திரமோகன் (வயது 30), அரியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (28), ஆற்காட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை செய்து வருகிறார்.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்திரமோகன் மனைவி லட்சுமியுடன் காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு செல்வதாகவும், இருவரும் 2 நாட்கள் அங்கு தங்கியிருந்து திங்கட்கிழமை காலை பள்ளி, கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி வருவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, வழக்கம் போல் கடந்த 9-ந் தேதி கணவன்-மனைவி இருவரும் காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றனர். இரவு வேல்முருகன் சென்னையில் உள்ள அவரது மூத்த மகன் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை சந்திரமோகன் பள்ளிக்கும், லட்சுமி கல்லூரிக்கும் காட்பாடியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

சந்திரமோகன் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து சந்திரமோகனுக்கு தகவல் தெரிவித்தனர். அதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரமோகன் பள்ளியில் இருந்து உடனடியாக வீடு திரும்பினார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு அறைகள் முழுவதும் பொருட்கள், துணிகள் ஆகியவை ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 7 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது.

இதுகுறித்து சந்திரமோகன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு சந்திரமோகன் மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், சந்திரமோகன் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றதும், சந்திரமோகன் வீட்டின் அருகே உள்ள வீட்டில் வசித்து வரும் என்ஜினீயர் எழிலரசன் வீட்டின் பூட்டை அறுத்து திருட முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story