ஜெயலலிதா படத்திறப்பு விழாவை அவசர கதியில் நடத்தி உள்ளனர் டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு


ஜெயலலிதா படத்திறப்பு விழாவை அவசர கதியில் நடத்தி உள்ளனர் டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Feb 2018 4:45 AM IST (Updated: 13 Feb 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா படத் திறப்பு விழாவை அவசர கதியில் நடத்தி உள்ளனர் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டி உள்ளார்.

தஞ்சாவூர்,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா படத்திறப்பு முக்கியமான ஒன்று. ஆனால் சட்டசபையில் அவரது படத்திறப்பு விழாவை அவசர கதியில், கட்சி விழா போல நடத்தி உள்ளனர். சென்னை மாநகராட்சி அலுவலகக்தில் முன்னாள் மேயர் படத்தை திறப்பது போல திறந்துள்ளனர்.

ஜெயலலிதா தேசிய தலைவர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் தகுதி நீக்கம் செய்தது தவறு என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் என்ற பயத்தில், அப்படி தீர்ப்பு வந்தால் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சிக்கு ஆபத்து வந்து விடும் என்ற பயத்தில் இது போன்று செய்துள்ளனர்.

ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்னும் 10 நாட்களில் வருகிறது. அப்போது தேசிய தலைவர்களை எல்லாம் அழைத்து அவருடைய படத்தை திறந்து இருக்கலாம். தற்போது நடைபெறும் ஆட்சி கமிஷன் மண்டி போல் நடக்கிறது.

ஜெயலலிதா பெயரை சொல்லிக்கொண்டு போலி ஆட்சி நடத்துகிறார்கள். அதற்கு ஒரு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், 4 அமைச்சர்களைக்கொண்டு விரும்பாத ஆட்சி நடக்கிறது.

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் தனித்தனியாக அவர்கள் சக்திக்கு ஏற்றார்போல் ஆட்சியை நடத்தி வருகிறார்கள். எம்.எல்ஏக்களுக்கு மாதந்தோறும் தனி சம்பளம் வழங்கி வருகிறார்கள். பல எம்.எல்.ஏ.க்கள் எங்களை தொடர்பு கொண்டு, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என கூறுகின்றனர்.

நான் மேற்கொண்டு உள்ள மக்கள் பயணத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அனைவரும் அமைச்சர்கள் பற்றி பேச வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்கள் எல்லாம் கேலி பொருட்களாக ஆகி விட்டனர். சினிமாவில் காமெடி நடிகர்களை பார்த்து சிரிப்பது போல் அமைச்சர்களை பற்றி பேச சொல்லி மக்கள் சிரிக்கிறார்கள். அமைச்சர் வேலுமணி குடும்பத்தினர் தான் உள்ளாட்சியில் அனைத்து வேலைகளையும் எடுத்து செய்கிறார்கள். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களிடம் உள்ளாட்சி பணியை ‘பேக்கேஜ்’ முறையில் பேசி செய்கிறார்கள்.

நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறந்ததற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கேட்கிறீர்கள். ஸ்டாலினுக்கு வருங்காலத்தில் அரசியலில் வேலை இருக்காது. ஜெயலலிதா மீது உள்ள வழக்கு குறித்து மக்களுக்கு தெரியும். எப்படியாவது முதல்-அமைச்சர் ஆகி விடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். தலைகீழாக நின்றாலும் அவரால் முதல்-அமைச்சர் ஆக முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

எங்கள் ஆட்சியில் யார் முதல்-அமைச்சர் என்று சசிகலா முடிவு செய்வார். நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு உள்ள நிலையில் நல்ல முடிவு வரும் என்பதால் ஆட்சி கலைந்து விடும் என சொல்லி வருகிறேன். இதில் யாரையும் ஏமாற்ற வில்லை. எடப்பாடி அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலரும் ஆட்சியை கலைத்து விட வேண்டும். வேண்டாத அமைச்சர்களை நீக்கி விட்டு, ஆட்சியை தொடர வேண்டும் என சொல்லி வருகிறார்கள்.

முதல்-அமைச்சராக நான் வர வேண்டும் என எம்.எல்.ஏ. ஆகவில்லை. ஒரு சவாலுக்காகத்தான் எம்.எல்.ஏ. ஆனேன். அதிகாரத்தில் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதால் அதிகாரம் கேட்கிறோம். பையை நிரப்பிக்கொள்வதற்காக அல்ல. தமிழகத்தில் உள்ள மதுபான ஆலைகளில் அமைச்சர் தங்கமணியின் கை தான் ஓங்கி உள்ளது. விசாரணை அமைத்தால் பல உண்மைகள் வெளியே வரும். தங்கமணி தான் சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும் என துடித்தார். அவர் எது வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story