திருப்பூரில், வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்தி வைத்திருந்த 8 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசம், போலீசார் விசாரணை


திருப்பூரில், வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்தி வைத்திருந்த 8 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசம், போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Feb 2018 3:15 AM IST (Updated: 13 Feb 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வீட்டு காம்பவுண்டில் நிறுத்தி வைத்திருந்த 8 இருசக்கர வாகனங்கள் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து சேதமானது. மர்ம ஆசாமிகள் யாரும் தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர்,

கோவையை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 62). இவருக்கு சொந்தமாக 6 வீடுகள் திருப்பூர் ராயபுரம் அணைமேடு பகுதியில் ஒரு காம்பவுண்டில் உள்ளன. இந்த வீடுகளில் வட மாநில தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி இருந்து பனியன் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தொழிலாளர்கள் தங்களுடைய மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள்களை தாங்கள் தங்கியிருந்த வீடுகளின் காம்பவுண்டுக்குள் நிறுத்தி வைத்திருந்தனர். நள்ளிரவு 12.30 மணி அளவில், அங்கு நிறுத்தி வைத்திருந்த ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென்று தீப்பற்றியது. பின்னர் அருகில் இருந்த மொபட்டுகளும் தீ பரவி, பற்றி எரிய ஆரம்பித்தது.

இதை கவனித்த அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தரம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 2 மோட்டார்சைக்கிள்கள், 6 மொபட்டுகள் ஆகியவை தீயில் எரிந்து நாசமாயின.

இந்த தீ விபத்தில் அருகில் உள்ள வீட்டின் ஜன்னலில் தீப்பற்றியது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் மேலும் தீயை பரவாமல் தடுத்தனர். அதுபோல் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனங்களுக்கு அருகே நிறுத்தி வைத்திருந்த மேலும் 2 இருசக்கர வாகனங்களும் தீப்பற்றி எரியாமல் தடுத்தனர்.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தினார்கள். மோட்டார் சைக்கிளில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா?. இல்லை மர்ம ஆசாமிகள் யாரும் தீ வைத்து விட்டு தப்பினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story