சேலத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 567 மனுக்கள் குவிந்தன


சேலத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 567 மனுக்கள் குவிந்தன
x
தினத்தந்தி 13 Feb 2018 4:15 AM IST (Updated: 13 Feb 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 567 மனுக்கள் குவிந்தன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கலெக்டர் ரோகிணி பாராட்டு தெரிவித்தார்.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் சிலர் கோரிக்கைகளை நிறைவேற்றாத அதிகாரியை கண்டித்து தங்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதை தடுக்க போலீசார் நுழைவு வாயில் முன்பு நின்று பொதுமக்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பிறகு கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல அனுமதி அளித்து வருகின்றனர்.

இதேபோல் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். கலெக்டர் அலுவலக வெளிப்புற மதில் சுவரை சுற்றிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். போலீசார் ஒலிபெருக்கி மூலம் யாரும் மதில் சுவர் அருகில் நிற்கக்கூடாது, மனு கொடுக்க வருபவர்கள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம், வாகனங்களை வெளியே நிறுத்தி விட்டு செல்ல வேண்டும், என அறிவுறுத்தினர்.

567 மனுக்கள்

மேலும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு உள்ள 2 கேட்டுகளில் ஒரு கேட் மட்டும் தான் திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால் போராட்டம் நடைபெறும் நேரங்களில் பொதுமக்களுக்கு சிரமமாக இருந்து வந்தது. இதை கருத்தில் கொண்டு 2 கேட்டுகளும் நேற்று திறக்கப்பட்டன. குறைதீர்க்கும் கூட்டத்திற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். பின்னர் அவரிடம் பொதுமக்கள் அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 567 மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

சேலம் பொன்னம்மாபேட்டை ரெயில்வே கேட் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறி வீடுகள் கடந்த சில நாட்களுக்கு முன்இடித்து அகற்றப்பட்டன. இங்குள்ள பொதுமக்களுக்கு மாற்று வீடு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

மாணவர்களுக்கு பாராட்டு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கலெக்டர் ரோகிணி பாராட்டி சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

குறைதீர்க்கும் கூட்டத்தில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் மனு கொடுத்து விட்டு சென்றனர். 

Next Story