பணத்திற்காக கடத்தப்பட்ட பெண் உள்பட 3 பேர் மீட்பு 6 பேர் கைது


பணத்திற்காக கடத்தப்பட்ட பெண் உள்பட 3 பேர் மீட்பு 6 பேர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2018 4:30 AM IST (Updated: 14 Feb 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் பணத்திற்காக கடத்தப்பட்ட பெண் உள்பட 3 பேரை மீட்ட போலீசார், அவர்களை கடத்திய 6 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

நாமக்கல்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி லட்சுமி(வயது 40). இவரது அக்காள் உஷா(52). இவரும், விஜயேந்திரன் என்பவரும் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆயுர்வேத மருத்துவமனை நடத்தி வருகின்றனர். இவர்களது மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த டாக்டர் சஞ்சய் வேலை செய்துவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் லட்சுமி, நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

மருந்து பொருட்கள் வழங்குவதாக கூறி, டாக்டர் சஞ்சய் 8 மாதங்களுக்கு முன்பு எனது அக்காள் உஷா, விஜயேந்திரன் ஆகியோரிடம் ரூ.15 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டார். இந்நிலையில் கடந்த 11-ந்தேதி சஞ்சய், திடீரென உஷாவிற்கு செல்போன் மூலம் பேசி, தான் நாமக்கல்லில் இருப்பதாகவும், இருப்பில் இருக்கும் மருந்துகளை கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். அதை நம்பி உஷா, அவரின் உறவினர் கோபிகிருஷ்ணன் மற்றும் விஜயேந்திரன் ஆகியோர் கிருஷ்ணகிரியில் இருந்து அன்று காலையில் காரில் மருந்து பொருட்களுடன் கிளம்பி, நாமக்கல் சென்றனர். அன்று மாலை 6 மணிக்கு சஞ்சயின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் உஷா உள்ளிட்ட 3 பேரையும் சஞ்சய் கடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.

இதன்பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் டாக்டர் சஞ்சயுடன், நாமக்கல்லை சேர்ந்த லோகேஸ், நவீன் ஆகியோர் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் தனிப்படை போலீசார் லோகேஸின் தந்தையிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது லோகேஸ் மற்றும் 5 பேர் சேர்ந்து பணத்திற்காக உஷா உள்பட 3 பேரையும் கடத்தி இருப்பதும், போலீசார் நெருங்கி வருவதை அறிந்ததும் கடத்தப்பட்ட 3 பேரையும் சேலத்தில் இறக்கிவிட்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாமக்கல் பகுதியை சேர்ந்த லோகேஸ்(23), நவீன்(24), சேகர்(27), கிருஷ்ணன்(21), சீனிவாசன்(25), மனோஜ் (22) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் டாக்டர் சஞ்சய் மீது கிருஷ்ணகிரி மற்றும் திருச்சியில் மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, நவீனின் உறவினர் நாமக்கல்லை சேர்ந்த பெரியசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் ஓசூரில் மருத்துவமனை நடத்திவரும் உஷா, கோபிகிருஷ்ணன், விஜயேந்திரன் ஆகியோர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி, மருந்து பொருட்களுடன் வரவழைத்து மிரட்டி, மேலும் பணம் பெற திட்டமிட்டு செல்போனில் அழைத்து இருப்பதும், ஓசூரிலிருந்து நாமக்கல் வரும் வழியில் புதுச்சத்திரம் அருகே காரில் ஏறிய நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, கண்ணை கட்டி கடத்திக்கொண்டு அடையாளம் தெரியாத ஒரு இடத்தில் அடைத்து வைத்ததும், உஷா அணிந்திருந்த 3 பவுன் தாலிச்சங்கிலியையும், ஏ.டி.எம். கார்டுகளையும் மற்றும் மருந்து பெட்டிகளையும் பறித்துக்கொண்டதும் போலீசார் தேடுவதை அறிந்து, அவர்கள் வந்த காரிலேயே கடத்திச்சென்று சேலம் பஸ்நிலையம் அருகே விட்டுச்சென்றதும் தெரியவந்தது.

மேலும் போலீசார் நடத்திய புலன் விசாரணையில், அவர்கள் அனைவரும் சஞ்சய் மற்றும் பெரியசாமி என்பவருடன் சேர்ந்து, ஆட்களை கடத்தி பணம் பறிக்கும் நோக்கத்துடன் கண்களை கட்டி அடைத்து வைத்து, கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கும் செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட லோகேஸ் உள்ளிட்ட 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள சஞ்சய் மற்றும் பெரியசாமி ஆகியோரை தேடிவருகின்றனர். கடத்தப்பட்ட 3 பேரையும் மீட்டு, குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டி, பரிசு வழங்கினார்.


Next Story