வருகிற 17-ந் தேதி பொதுக்கூட்டத்தில் வெளியிடப்படும் 140 தொகுதிகளுக்கு, முதல் வேட்பாளர் பட்டியல் குமாரசாமி அறிவிப்பு


வருகிற 17-ந் தேதி பொதுக்கூட்டத்தில் வெளியிடப்படும் 140 தொகுதிகளுக்கு, முதல் வேட்பாளர் பட்டியல் குமாரசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2018 2:30 AM IST (Updated: 14 Feb 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

140 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியல் வருகிற 17-ந் தேதி நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் வெளியிடப்படும் என்று குமாரசாமி அறிவித்தார்.

பெங்களூரு,

140 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியல் வருகிற 17-ந் தேதி நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் வெளியிடப்படும் என்று குமாரசாமி அறிவித்தார்.

ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல் வேட்பாளர் பட்டியல்

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சியின் 140 தொகுதிகளுக்கு முதல் வேட்பாளர் பட்டியல் வருகிற 17-ந் தேதி வெளியிடப்படும். மோடியின் பொதுக்கூட்டத்திற்கு எத்தனை பேர் வந்தனர், ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு மக்களிடையே வரவேற்பு எப்படி இருந்தது எனபது எங்களுக்கு தெரியும். முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிட பெங்களூருவில் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் எங்கள் கட்சியை சேர்ந்த 10 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இதன் மூலம் எங்களின் பலத்தை நிரூபிப்போம். பெங்களூரு எலகங்கா அருகே இந்த பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் மாநாட்டை நகருக்கு வெளியே நடத்த திட்டமிட்டுள்ளோம். மாநாட்டில் வேட்பாளர்கள், தாங்கள் நேர்மையாக செயல்படுவது குறித்து உறுதிமொழி ஏற்பார்கள்.

போட்டியிடுவது இல்லை

100 எல்.சி.டி. பிரசார வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த வாகனங்கள் எங்கள் கட்சிக்காக பிரசாரத்தில் ஈடுபடும். இந்த வாகனங்களின் பிரசாரம் வருகிற 17-ந் தேதி தொடங்கும். முதல் பட்டியலில் எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் டிக்கெட் கொடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

ஆனால் சில எம்.எல்.ஏ.க்கள் தனிப்பட்ட காரணங்களால் இந்த தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இதனால் காங்கிரசுக்கு பாதிப்பு உண்டாகும். கம்யூனிஸ்டு மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்தும் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

மத்திய அரசு நிதி ஒதுக்கியது

பகுஜன் சமாஜ் கட்சி உடனான கூட்டணி தேசிய அரசியலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும். மாநில கட்சிகள் சொந்த பலத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும். காவிரி, கிருஷ்ணா நதி நீர் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்(என்.டி.ஏ.) இருந்து வெளியே வருவதாக ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறினார். உடனே அவரது மாநிலத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது.

அதனால் மாநில கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும். மாநில மக்கள் எங்கள் கட்சியை வெற்றி பெற செய்தால் மாநிலத்தின் நலனை காக்க முடியும். கர்நாடகம் பற்றி தேசிய கட்சிகளுக்கு அக்கறை இல்லை. கர்நாடகத்தில் 10 சதவீத ‘கமிஷன்’ அரசு நடைபெறுவதாக மோடி கூறி இருக்கிறார். அவர் கூறிய கருத்து சரியானதே. முந்தைய பா.ஜனதா அரசில் 10 சதவீத ‘கமிஷன்’ இருந்தது உண்மைதான். தற்போது இந்த கமிஷனின் சதவீதம் அதிகரித்துவிட்டது.

கர்நாடகத்தில் யாரும் இல்லையா?

நீர்ப்பாசனத்துறையில் குத்தகை பணிகளை எடுக்க கர்நாடகத்தில் யாரும் இல்லையா?. கன்னடர்கள் எத்தனை பேருக்கு இந்த குத்தகை பணிகள் வழங்கப்பட்டுள்ளன?. எங்கள் சொந்த பலத்தில் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. மாமிசம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்வதில் என்ன தவறு உள்ளது.

சில கோவில் சாமிகளுக்கு மாமிசம் தான் அதிக விருப்பமான உணவு. மனது சுத்தமாக இல்லாவிட்டால் கோவிலுக்கு செல்வதில் எந்த பயனும் இல்லை. சாலையை அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.38 கோடி செலவு செய்துள்ளனர். இந்த சாலைகளுக்கு தங்கம் அல்லது வெள்ளி முலாம் பூசுகிறார்களா?. ஊழலுக்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா?.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story