தினமும் திரைப்படங்கள்–மெகாதொடர்கள் படப்பிடிப்பு: மினி கோடம்பாக்கமாக திகழும் கோவூர்
கோவூர் மினி கோடம்பாக்கமாக திகழ்கிறது. இங்கு சினிமா, மெகாதொடர்களின் படப்பிடிப்புகள் தினமும் நடக்கின்றன.
பூந்தமல்லி,
குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவூர் மினி கோடம்பாக்கமாக திகழ்கிறது. இங்கு தினமும் சினிமா, மெகாதொடர்களின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
இங்கு அந்தக் கால நடிகர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் மற்றும் விஜய், அஜித் வரை கால்தடம் பதிக்காத நடிகர்களே இல்லை எனலாம்.
கோவூர் ஊராட்சி
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவூர் ஊராட்சி, சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஊர் அந்தக் காலத்தில் இருந்தது போலவே தற்போதும் பல இடங்களில் பழமை மாறாமல் அப்படியே இருந்து வருகிறது.
உதாரணமாக இங்கு இன்றும் விவசாயம் நடைபெறுகிறது. ஆங்காங்கே பழமை மாறாத பழைய ஓட்டு வீடுகள், கோவில்கள் என எழில் கொஞ்சும் பகுதியாக காட்சி அளிக்கிறது.
அந்தக் காலத்தில் ஒவ்வொரு தெருவும் சுமார் 40 அடி அகல சாலையாக இருந்துள்ளது. கோவிலை சுற்றிலும் மரங்கள் என பசுமையுடன் காட்சி தந்தது.
சினிமாவில் முக்கிய பங்கு
இதன் காரணமாகவே இந்தப் பகுதி சினிமா இயக்குனர்களின் கண்களில்பட்டது. கிராமத்து கதைக்கு ஏற்றார்போல் கோவூர் பகுதி அமைந்து விட்டதால் கூடுதலாக செலவு செய்து செட் அமைக்க தேவை இல்லை.
இதனால் தயாரிப்பாளர்களுக்கு பொருட்செலவு மிச்சம் என்பதால் இந்த ஊரின் ஒரு பகுதி தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பங்கு வகித்து வந்தது. படத்தில் ஒரு காட்சியாவது இந்த ஊரில் எடுக்கப்பட்டு இருக்கும்.
குறிப்பாக இந்தப் பகுதியில் நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான புதன் ஸ்தலமான சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ராஜகோபுரத்தின் முன்புறம் வரிசையாக இருபுறமும் அமைந்துள்ள அசோக மரம் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
மெகாதொடர்
இந்தக் காட்சியை தமிழ்த்திரைப்படங்களில் பெரும்பாலும் நாம் கண்டு இருக்கலாம். கடந்த பல வருடங்களாக இந்த ஊரில் ஏராளமான திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளது.
இங்கு எம்.ஜி.ஆரின் படங்கள் படப்பிடிப்பு நடத்தப்படாவிட்டாலும், இங்குள்ள சுந்தரேஸ்வரர் கோவிலுக்கும், கோவூர் கிராமத்துக்கும் எம்.ஜி.ஆர். அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
தொலைக் காட்சிகளில் மிக பிரபலமான மெகாதொடர்களும் இந்த ஊரில் தற்போது வரை படம் பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிறிய நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை இந்த ஊரில் கால் தடம் பதிக்காத நடிகர்களே இல்லை என்ற சிறப்பை பெற்றுள்ளது.
‘பெட்ரோமாக்ஸ் லைட்’ நகைச்சுவை காட்சி
தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவையில் மிகவும் கொடி கட்டிப் பறந்த கவுண்டமணி– செந்தில் இணைந்து நடித்த 20–க்கும் மேற்பட்ட படங்களின் நகைச்சுவை காட்சிகள் இங்குதான் படம்பிடிக் கப்பட்டது.
குறிப்பாக மிகவும் பிரபலமான, இன்றும் அந்த காட்சிகளை டி.வி.யில் பார்த்தால் ரசித்து சிரிக்க கூடிய நகைச்சுவையான ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் வரும் ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ என்ற நகைச்சுவை காட்சியும், அதே படத்தில் வரும், ‘கல்லைக்கண்டால் நாயைக்காணோம், நாயக்கண்டால் கல்லைக்காணோம்’ என்று கூறி செந்திலை கல்லால் அடித்தபடி கவுண்டமணி விரட்டிச்செல்லும் காட்சிகளும் இங்குதான் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் நடித்த ‘மாப்பிள்ளை’ படத்தில் வரும் ‘‘என்னோட ராசி நல்ல ராசி’’ என்ற பாடல் மற்றும் அதற்கு முன்பு நடைபெறும் சண்டைக்காட்சியும் இங்குதான் எடுக்கப்பட்டது. ‘கோவை பிரதர்ஸ்’ படத்தில் நடிகர்கள் சத்யராஜ், வடிவேலு நடத்தும் கிரிக்கெட் போட்டி இந்த கோவில் முன்புதான் எடுக்கப்பட்டது.
இது குறித்து கோவூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–
நடிகர்களை நேரில் பார்ப்போம்
மற்ற ஊர்களை சேர்ந்தவர்கள் திரைப்பட நடிகர்களை சின்னத்திரையிலும், பெரிய திரையிலும்தான் பார்க்க முடியும். ஆனால் எங்கள் கிராமத்தில் அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடைபெறுவதால் நாங்கள் அவர்களை நேரில் பார்த்து விடுவோம். எங்கள் ஊரில் ஏராளமான படபிடிப்புகள் நடந்துள்ளன.
பழம்பெரும் நடிகர்களான சிவாஜி, ஜெமினிகணேசன், சிவகுமார், நாகேஷ், சுருளிராஜன், தங்கவேலு, கவுண்டமணி, செந்தில், வடிவேலு, ரஜினி, கமல் மற்றும் தற்போதைய நடிகர்கள் விஜய், அஜித் என அனைத்து நடிகர்களையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.
இங்கு அடிக்கடி படப்பிடிப்பு நடைபெறுவதால் அதை கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்து அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் வழக்கம்போல் நாங்கள் எங்கள் பணியை செய்வோம்.
தெலுங்கு–கன்னட படங்கள்
தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட படங்களும் இங்கு எடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர்கள் கிருஷ்ணா, என்.டி.ஆர். ஆகியோர் படங்களும் இங்கு அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
1970 முதல் 1990 வரை வெளியான பெரும்பாலான படங்கள் எங்கள் ஊரில் எடுக் கப்பட்டதுதான். அப்போது வெளியான திரைபடங்களில், எங்கள் ஊரில் எடுக்கப்பட்ட காட்சிகள் ஒன்றாவது இருக் கும். இதனால் கோவூர் என்றால் பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை அனைவருக்கும் நன்கு தெரியும்.
இங்கு பழமையான மற்றும் பாரம்பரியமான ஓட்டு வீடுகள் இன்றும் உள்ளன. குறிப்பாக ஒரு வீட்டில் மட்டும் ஏராளமான திரைப்படங்கள், மெகாதொடர்கள் எடுத்துள்ளனர். ரஜினிகாந்த் நடித்த ‘ராகவேந்திரா’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, விஜயகாந்த் நடித்த ‘அம்மன்கோவில் கிழக்காலே’, ‘வைதேகி காத்திருந்தாள்’ உள்ளிட்ட ஏராளமான படக்காட்சிகள் அந்த வீட்டில் எடுக்கப்பட்டதுதான்.
தினமும் படப்பிடிப்பு
தொலைக்காட்சியில் வெளியான தொடர்களின் பெரும்பாலான காட்சிகள் அந்த வீட்டில்தான் எடுக்கப்பட்டது. அந்த காலம் தொடங்கி தற்போது வரை இந்த பகுதியில் சினிமா படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இங்கு படப்பிடிப்பு நடக் காத நாளே கிடையாது. தினமும் ஏதாவது ஒரு திரைப்படம் அல்லது மெகா தொடர்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டே இருக்கும்.
இதனால் எங்கள் பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். அந்த காலம் தொடங்கி தற்போது வரை மினி கோடம்பாக்கமாகவே கோவூர் திகழ்ந்து வருகிறது எங்களுக்கு பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story