ஆக்கிரமிப்புகளால் தூர்ந்துபோன கால்வாய்: கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம்


ஆக்கிரமிப்புகளால் தூர்ந்துபோன கால்வாய்: கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 14 Feb 2018 4:00 AM IST (Updated: 14 Feb 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே ஆக்கிரமிப்புகளால் தூர்ந்துபோன கால்வாயால் கழிவுநீர் தேங்கி பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குடியாத்தம்,

குடியாத்தம் நெல்லூர்பேட்டை சாமுண்டிபுரம் பகுதியில் நெசவு தொழிலாளர்கள் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் என தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இதன் ஒரு பகுதி நகராட்சி எல்லைக்குள்ளும், மற்றொரு பகுதி செருவங்கி ஊராட்சி 1, 2-வது வார்டில் 4 தெருக்களும் உள்ளன.

இந்த 4 தெருக்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வெளியேறும் கழிவுநீர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய் வழியாக செருவங்கி ஊராட்சி, தாழையாத்தம் ஊராட்சி வழியாக ஆற்றில் கலக்கிறது. தற்போது அந்த கழிவுநீர் செல்லும் கால்வாய் சாமுண்டிபுரம் பகுதியை தாண்டிய பின்னர் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்து போய் உள்ளது. மேற்கொண்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கழிவுநீர் கால்வாய்க்காக பல ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மேற்கொண்டு செல்ல வழியில்லாததால் வீடுகளுக்கு வெளியே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்கள் தொற்று நோய்களுக்கு உள்ளாகக்கூடிய நிலை உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. எனவே, உடனடியாக அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இல்லையெனில் இப்பகுதி மக்கள் விரைவில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையை அரசிடம் ஒப்படைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story