குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாக புகார்: பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாக புகார்: பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Feb 2018 3:30 AM IST (Updated: 14 Feb 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

மதுரை,

மதுரை மாநகராட்சியின் 16, 17-வது வார்டு பகுதிகளாக மகப்பூப்பாளையம், தாமஸ்காலனி, நியூ எல்லீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகள் இருக்கின்றன. இந்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீரில் சாக்கடை கலந்து வந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சாக்கடை கலந்து வந்த குடிநீருடன் அரசரடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு வந்த எஸ்.எஸ்.காலனி போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், நீண்ட நாட்களாகவே எங்கள் பகுதியில் குடிநீருடன் சாக்கடை கலந்து வருகிறது. மாநகராட்சியின் சார்பில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படுகிற தண்ணீரும் சாக்கடை கலந்து வருவதால் குடிப்பதற்கு தண்ணீர் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியது உள்ளது. 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வந்த சமயத்தில் கூட இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. எங்கள் பகுதிகள் மட்டுமின்றி மதுரையில் பல பகுதிகளில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Next Story