ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி முன்னாள் நீதிபதியின் தந்தை, தற்கொலை மிரட்டல்


ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி முன்னாள் நீதிபதியின் தந்தை, தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 14 Feb 2018 3:00 AM IST (Updated: 14 Feb 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி முன்னாள் நீதிபதியின் தந்தை, தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டு அருகே உள்ள மேலகோவில்பட்டி புனித சவேரியார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜீவகன். முன்னாள் நீதிபதி. அவருடைய தந்தை சதானந்தம் (வயது 80). அதே பகுதியில் வசித்து வருபவர் கஸ்பார். சதானந்தமும், கஸ்பாரும் உறவினர்கள். இந்தநிலையில் கஸ்பார், அந்த தெருவை ஆக்கிரமித்து கழிப்பறை கட்டியதாக கூறப்படுகிறது.

இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சதானந்தம் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் அந்த பகுதியில் கடந்த வாரம் அதிகாரிகள் சென்று நில அளவை செய்தனர். அப்போது சதானந்தமும், கஸ்பாரும் தெருவை ஆக்கிரமித்து இருப்பது தெரியவந்தது. இதனால் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பகுதியை சேர்ந்த மூதாட்டி சிறுமணி அம்மாள் என்பவர் பொக்லைன் எந்திரம் முன்பு படுத்து மறியல் செய்தார். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எல்லை கற்களை மட்டும் ஊன்றி விட்டு அதிகாரிகள் சென்று விட்டனர்.

இந்தநிலையில் திண்டுக்கல் கலெக்டர் டி.ஜி.வினய், வத்தலக்குண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இணையதளம் மூலம் 45 பக்கங்களை கொண்ட மனுவை சதானந்தம் அனுப்பி உள்ளார். அந்த மனுவில், ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகாவிடம் கேட்டபோது, சதானந்தம், கஸ்பார் ஆகியோர் தலா 2 மீட்டர் அளவில் தெருவை ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக கஸ்பார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதனை எதிர்த்து மனுதாக்கல் செய்திருக்கிறோம். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று சதானந்தத்தை அறிவுறுத்தியுள்ளோம். தான் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்றால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து இருக்கலாம். ஆனால் இ-மெயில் மூலம் சதானந்தம் மனு அனுப்பியுள்ளார். இதனால் அதிகாரிகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இது சட்ட விரோதமான செயல் ஆகும். இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Next Story