கட்டிட வரைபட ஒப்புதலுக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர்கள் 2 பேர் கைது


கட்டிட வரைபட ஒப்புதலுக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2018 4:15 AM IST (Updated: 14 Feb 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே, வீடு கட்ட கட்டிட வரைபட ஒப்புதலுக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர்கள் 2 பேர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சேர்ந்தவர் இளங்கோ. மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய தந்தை முகவூரில் வசிக்கிறார். அவர் கொடுத்த இடத்தில் இளங்கோ கூடுதல் கட்டிடம் கட்ட முடிவு செய்தார். இதற்காக செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை நாடினார். கட்டிடம் கட்டுவதற்கு வரைபட ஒப்புதல் வாங்க அரசால் நிர்ணயித்த தொகை ரூ.7,240-ஐ 3 தவணையாக வங்கி மூலம் அரசுக்கு செலுத்தினார்.

ஆனாலும் அவருக்கு வரைபட ஒப்புதல் கிடைக்கவில்லை. இது குறித்து பேரூராட்சி வரி வசூலிப்பாளர் காமராஜிடம் கேட்டார். அதற்கு அவர் ஒப்புதல் வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூறினார்.

இது குறித்து இளங்கோ விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலை பெற்றுக் கொண்ட துணைபோலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் விஜயகாண்டீபன், பூமிநாதன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

பேரூராட்சி அலுவலகத்தில் தனது உதவியாளர் சதீஷ் என்பவரிடம் ரூ.5 ஆயிரத்தை அளிக்குமாறு காமராஜ் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்த ரசாயனம் தடவப்பட்ட பணத்தை சதீஷிடம் இளங்கோ கொடுத்த போது மறைந்திருந்த அதிகாரிகள் சதீஷை கையும் களவுமாக பிடித்தனர். பிறகு காமராஜும் பிடிபட்டார். இருவரையும் போலீசார் கைது செய்ததோடு லஞ்சமாக பெற்ற பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story