மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும், வைகோ வலியுறுத்தல்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும், வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Feb 2018 4:00 AM IST (Updated: 14 Feb 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இடத்தை நேற்று பார்வையிட்டார்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வந்தார். அவர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார். சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தை பார்வையிட்ட போது அவர், பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகாரிகளின் யோசனைப்படி, தலையில் இரும்புத் தொப்பி அணிந்து இருந்தார். அங்கு நடைபெறும் பணிகள் குறித்து கோவில் இணை கமிஷனர் நடராஜனிடம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றை குறிக்கும் இடமாக கோவில்கள் இருக்கின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்பு கட்டப்பட்டது. கோவிலின் கலை பொக்கிஷமாக ஆயிரங்கால் மண்டபத்தில் இசை தூண்கள் உள்ளன. இதனை உலகில் எங்கும் காண முடியாது. கலையழகு மிகுந்த இடம் மீனாட்சி அம்மன் கோவில் என்று நான் நாடாளுமன்ற உரையில் பதிவு செய்து இருக்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் அங்குள்ள தூண்கள், மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளன. எனவே பாதிக்கப்பட்ட பகுதியை பழமை மாறாமல் சீரமைப்பது அரசின் கடமை. ஆனால் விபத்தில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

கோவில்களில் உள்ள கடைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும். கோவில்கள் புனிதமான இடம். வருங்கால சந்ததிகள் தங்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கோவில்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. எனவே இதனை பழமை மாறாமல் பாதுகாத்து வருங்கால சந்ததிகளுக்கு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story