ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் ரெயில் மறியல் போராட்டம்


ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2018 4:30 AM IST (Updated: 14 Feb 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சேலத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து 66 பேர் கைது செய்யப்பட்டனர்.

சூரமங்கலம்,

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கூடாது, ரெயில் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, சேலம், திருப்பூர், கோவை, ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கொடியுடன் நேற்று காலை சூரமங்கலம் தபால் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்கத்தின் மாநில செயலாளர் பாலா தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், திருப்பூர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பக்கோடா வழங்கப்பட்டது. ரெயில் மறியல் போராட்டத்தையொட்டி ஏற்கனவே போலீஸ் துணை கமி‌ஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை ஆகியோர் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து வாலிபர் சங்கத்தினர் ஊர்வலமாக ரெயில் நிலையம் நோக்கி சென்றனர். அங்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் வாலிபர் சங்கத்தினர் ரெயில் நிலையத்திற்குள் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள், கயிறுகளை இழுத்தனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதையடுத்து, போலீசாரையும் மீறி வாலிபர் சங்கத்தினர் சிலர் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து முதல் பிளாட்பாரத்தில் உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரெயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்ககூடாது என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும், மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 66 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி, சித்தனூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

முன்னதாக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் பாலா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘ரெயில்வே துறையில் லட்சக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. ஆனால் மத்திய அரசு ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துகிறது. இதனால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். நாட்டை பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு ரெயில் கட்டணத்தை உயர்த்துவதைவும், ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதையும் கண்டிக்கிறோம்’’ என்றார்.


இதனிடையே சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவை செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் முதலாவது பிளாட்பாரத்திற்கு காலை 11 மணிக்கு வந்து செல்லும். ஆனால் நேற்று மறியல் போராட்டம் காரணமாக இந்த ரெயில் 4–வது பிளாட்பாரம் வழியாக வந்து செல்ல அறிவிக்கப்பட்டது.


Next Story