சோதனை குழாய் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் சிக்கல் மாநகராட்சி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


சோதனை குழாய் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் சிக்கல் மாநகராட்சி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Feb 2018 3:45 AM IST (Updated: 14 Feb 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

சோதனை குழாய் முறை மூலம் பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பிரச்சினையில் பதிலளிக்குமாறு மும்பை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

சோதனை குழாய் முறை மூலம் பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பிரச்சினையில் பதிலளிக்குமாறு மும்பை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பிறப்பு சான்றிதழ் பிரச்சினை

தானே மாவட்டம் நாலச்சோப்ராவை சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் கடந்த 2016-ம் ஆண்டு சோதனைக்குழாய் முறை மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதற்காக மும்பை மாநகராட்சியில் விண்ணப்பித்திருந்தார்.

மேலும் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் குறிப்பிடப்படும் இடத்தை வெறுமையாக விடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மாநகராட்சி மறுத்துவிட்டது.

எனவே இதுகுறித்து அந்த பெண் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், 2015-ம் ஆண்டு இதேபோன்ற ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் தனியாக குழந்தையை பெற்றெடுத்த தாய், பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை குறிப்பிட தேவையில்லை என அளித்திருந்த தீர்ப்பையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

கடைசி வாய்ப்பு

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் மாநகராட்சியிடம் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்த வழக்கு நீதிபதிகள் ஒகா மற்றும் தேஷ்முக் அடங்கிய அமர்வுக்கு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மாநகராட்சிக்கு கடைசி வாய்ப்பாக மேலும் 2 வாரங்கள் வழங்குவதாகவும், அதற்குள் உரிய பதில் அளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Next Story