கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2018 3:56 AM IST (Updated: 14 Feb 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது குருவராஜகண்டிகை கிராமம். இங்கு இருந்து ஈகுவார்பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் காரமேடு பகுதியில் வயல்வெளியையொட்டி மதுக்கடை உள்ளது. எப்போதும் அந்த பகுதியில் மதுபிரியர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். மதுபிரியர்களின் தொல்லையால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள். மதுக்கடையை அகற்றக்கோரி அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு மனு அளித்து வந்தனர்.

இருப்பினும் மதுக்கடை அகற்றப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள், பள்ளி மாணவ- மாணவிகள் என்று பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று மதுக்கடையை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து மதுக்கடையை ஊழியர்கள் மூடினர். தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜகோபால், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உங்கள் கோரிக்கை தொடர்பாக கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் டாஸ்மாக் துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் உங்களுக்கான பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தாசில்தார் ராஜகோபால் தெரிவித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story