கலெக்டரின் காதல் கோட்டை


கலெக்டரின் காதல் கோட்டை
x
தினத்தந்தி 14 Feb 2018 1:22 PM IST (Updated: 14 Feb 2018 1:22 PM IST)
t-max-icont-min-icon

இன்று (பிப்ரவரி 14) காதலர் தினம். உலக அதிசயங்களில் ஒன்றாக இடம் பிடித்த தாஜ்மகாலை போல் ஒரு காதலின் நினைவுச்சின்னமான கல்லறை இன்னும் எத்தனை ஜென்மங்களிலும் உருவாக போவதில்லை.

மும்தாஜ் என்ற அழகிய மனைவியின் மீது ஷாஜகான் வைத்திருந்த நேசத்தின் கலைவடிவம் அது. இத்தகைய சரித்திரம் போற்றும் காதலின் நினைவு சின்னங்கள் ஆங்காங்கே உலகெங்கும் இருந்தாலும் தமிழகத்தில் இதுபோன்ற காதலர்களின் நினைவு சின்னம் உண்டா? என்றால் ஆம் நிச்சயம் உண்டு. ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் உருவாகி சுமார் 225 ஆண்டுகளை கடந்து விட்டன. இதுவரை 165-க்கும் மேற்பட்ட கலெக்டர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். இந்த பட்டியலில் காதலிக்காக காதல் கோட்டை கட்டிய கலெக்டரும் இடம் பிடித்துள்ளார். அவர் ஹாரி அகஸ்டஸ் பிரட்ஸ் என்ற ஆங்கிலேயர்.

இவர் 1843, 1845 மற்றும் 1853-ம் ஆண்டு முதல் 1862-ம் ஆண்டு வரை 3 முறை சேலம் மாவட்ட கலெக்டராக இருந்துள்ளார். இங்கிலாந்தில் இருந்த தனது காதலிக்காக அப்போது ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் ஒருபகுதியான ஓசூரில் அழகிய கோட்டை ஒன்றை அவர் எழுப்பினார். இங்கிலாந்தில் உள்ள கெனில் வொர்த் என்ற மாளிகை தோற்றத்தில் அப்போதைய ஆங்கில அரசுக்கு தெரியாமல் அந்த காதல் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.

இதற்காக அவர் ரூ.1¾ லட்சம் செலவு செய்தார். ஆனால் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்து வாழ அவரது காதலி மறுத்து விட்டதால் பிரட்ஸ் மனம் உடைந்தார். ஒரு கட்டத்தில் அவர் தான் செல்லமாக வளர்த்த நாயை சுட்டுக்கொன்று விட்டு தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதலியுடன் இந்தியாவில் சேர்ந்து வாழ வேண்டும் என்ற அவரது ஆசை நிராசையாகி போனது. அவரின் முடிவு சோகமாக இருந்தாலும் அவரது ஆட்சிமுறை சிறப்பாகவே இருந்ததாக கருதப்பட்டதால், அவரது நினைவாக சேலத்தில் ஒரு சாலைக்கு அவர் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், அவர் கட்டிய காதல் கோட்டை இன்றைக்கு தகர்க்கப்பட்டு குடியிருப்பாகி போனதும் சோகம்தான்.

-மாயா

Next Story