பஸ் கட்டண உயர்வுக்கு தமிழக அரசின் தோல்வியே காரணம் - மு.க.ஸ்டாலின் பேச்சு


பஸ் கட்டண உயர்வுக்கு தமிழக அரசின் தோல்வியே காரணம் - மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 15 Feb 2018 5:00 AM IST (Updated: 15 Feb 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வுக்கு தமிழக அரசின் தோல்வியே காரணம் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருவள்ளூர்,

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. அரசை கண்டித்து திருவள்ளூர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்கு தி.மு.க.வின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.

வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணு, திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சி அறக்கட்டளை அறங்காவலரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான யசோதா, ம.தி.மு.க. உயர்நிலைக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி நீலவானத்து நிலவன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் அமீன்சுல்தான், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் சுந்தர்ராஜன், ஏ.எஸ்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன.

திடீரென ஒரே நாளில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். பஸ் கட்டணத்தை ஒரு பைசா, 2 பைசா என உயர்த்தாமல் 108 சதவீதம் உயர்த்தியுள்ளனர்.

அதற்கு கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்து ஆர்ப்பாட்டம், மறியல், சிறைநிரப்பும் போராட்டம் நடத்தின.

மறியல் போராட்டம் நடத்திய எங்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைக்க இடம் இல்லை என விடுதலை செய்தனர். மறியல் செய்ததற்காக நியாயமாக சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான் நியதி. அதுதான் சட்டம். ஆனால் மறியல் செய்தவர்களை சிறையில் அடைக்க வக்கற்ற ஆட்சிதான் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. ரூபாய் கணக்கில் பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டு பைசா கணக்கில் குறைத்து அரசு கபட நாடகம் ஆடுகிறது.

தி.மு.க. ஆட்சியில் இருந்த போது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது உண்மைதான். நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் எந்த நிலையில் உயர்த்தப்பட்டது என்றால் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில், ஒப்புக்கொள்ளக்கூடிய நிலையில் உயர்த்தப்பட்டது. எங்கும் போராட்டங்கள் வெடிக்கவில்லை. ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. கோரிக்கைகள் மட்டுமே விடப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது. 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டது சரியா?, தவறா? என ஒரு வாரத்தில் தீர்ப்பு வர உள்ளது. அது வந்த பின்னர்தான் மக்களின் மனநிலை என்ன என தெரியவரும். பஸ் கட்டண உயர்வுக்கு தமிழக அரசின் தோல்விதான் காரணம். அரசு செயல்படாமல் இருக்கிறது. டெண்டரில் ஊழல், பஸ் டிக்கெட் அச்சடிப்பதில் ஊழல், உதிரி பாகங்கள் கொள்முதல் செய்வதில் ஊழல் போன்றவைதான் காரணங்கள் ஆகும்.

தமிழக சட்டசபையில் திருவள்ளுவர், அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., முத்துராமலிங்கதேவர் போன்ற தன்னலம் கருதாமல் நாட்டுக்காக பாடுபட்ட எந்த ஊழல் குற்றச்சாட்டிற்கும் ஆளாகாதவர்களின் படங்கள் உள்ளது. ஆனால் ஜெயலலிதா படம் சட்டசபையில் திறக்கப்பட்டுள்ளது. அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அபராதமும், சிறைதண்டனையும் விதிக்கப்பட்டவர்.

எனவே அவர் படத்தை வைத்தால் சட்டசபைக்கு வரும் நமது சந்ததியினர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு அதை சொல்லக்கூடிய நிலை தேவையா?, கோர்ட்டு தண்டனை அளித்த ஒருவருக்கு சட்டசபையில் படம் வைப்பது நியாயமா?, இதற்கு இந்த அரசு பதில் கூறவேண்டும். தற்போது அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. எனவே இந்த ஆட்சியை அப்புறப்படுத்த நாம் தயாராக வேண்டும்.

இவ்வாறு இவர் கூறினார்.

கண்டன பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் வெள்ளி செங்கோலை நினைவு பரிசாக வழங்கினார். பஸ் கட்டண உயர்வை கண்டித்து நடந்த பொதுக்கூட்ட மேடையில் அரசு பஸ் மாதிரி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story